Last Updated:
10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ஹுஜூராபாத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் – திரிவேணி தம்பதி. ஐதராபாத்தில் உள்ள நல்லகுண்டா பகுதியில் இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர். கணவன் வெங்கடேஷ், தனது மனைவி திரிவேணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வேலைக்கு கூட செல்லாமல் அவரை வேவு பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.
மேலும் தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியும் இருக்கிறார். கணவன் வேலைக்கு செல்லாத நிலையில் குடும்ப தேவைகளை சமாளிக்க ஹோட்டல் மற்றும் வீடுகளுக்கு சென்று வேலை செய்து வந்துள்ளார் திரிவேணி. ஆனால் யார் என்றே தெரியாத ஒரு நபருடன் மனைவி திரிவேணிக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக கருதிய வெங்கடேஷ், அவரை தினமும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார். அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இதை புரிந்து கொண்டு, வெங்கடேஷை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் கொடுமைக்கார கணவனின் துன்புறுத்தல்களை தாங்க முடியாத திரிவேணி, தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஓரிரு நாட்களில் மனைவியின் வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ், “நான் மாறிவிட்டேன். இனி நன்றாக பார்த்துக் கொள்வேன்” என்று சொல்லி மனைவி திரிவேணியை நம்ப வைத்து ஐதராபாத்திற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் மீண்டும் மது அருந்தி வீட்டுக்கு வந்த வெங்கடேஷ் மனைவியுடன் சண்டை போட்டு அவரை கொடுமையாக தாக்கி இருக்கிறார்.
அதன் பிறகும் போதை வெறியில், திரிவேணி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். வீட்டிற்குள் குழந்தைகள் கண் முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. தாயார் மீது தீ வைப்பதை தடுக்க முயன்ற பெண் குழந்தையை, தீயில் தள்ளி விட்டு இருக்கிறார் வெங்கடேஷ். வீட்டிற்குள் மனைவி தீயில் எரிந்து கொண்டு இருக்க, மகளை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு, மகனை மட்டும் அழைத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து, வீட்டிற்குள் இருந்து புகை மற்றும் அலறல் சத்தம் வருவதை அருகே இருந்தவர்கள் பார்த்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் திரிவேணி உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். தீக்காயம் அடைந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி, தப்பி ஓடி தலைமறைவாக இருந்த வெங்கடேஷை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதல் மனைவியை கொலை செய்து விட்டு, கணவனும் சிறைக்கு சென்ற நிலையில், அவர்களின் இரு குழந்தைகளின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. குழந்தைகள் கண்முன் மனைவியை எரித்து கணவன் கொன்ற சம்பவம் ஐதராபாத் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hyderabad,Telangana


