Last Updated:
ஆந்திராவில் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவரே மனைவிக்கு எமனான சம்பவத்தில் நடந்தது என்ன?
ஆந்திராவில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவரே மனைவிக்கு எமனான சம்பவத்தில் நடந்தது என்ன? ஆந்திராவை உலுக்கிய கொடூரக் கொலையின் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர்கள் தேவுடு – துர்கா தம்பதி. சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, பி.டெக் படிக்கும் மகன் ஒருவர் இருக்கிறார். ஆரம்பத்தில் அன்பாக நகர்ந்த இவர்களது குடும்ப வாழ்க்கை, துர்கா வேலைக்கு சென்றபின் தலைகீழானது.
துணிக்கடையில் சேல்ஸ் கேர்ளாக வேலைக்கு சென்றுவந்த துர்கா, தினமும் டிப் டாப்பாக புறப்பட்டு செல்வது வழக்கம். அது தேவுடுக்கு கடும் ஆத்திரத்தை வரவழைத்தது. துணிக்கடை வேலைக்கு, லிப்ஸ்டிக் தேவையா? என மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.
தோளுக்கு மேல் வளர்ந்த மகன் இருந்ததாலும், கண்ணியத்துடன் நடந்துகொண்டதாலும் கணவனின் கண்டிப்பை துர்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரை எதிர்த்து நிற்க, அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை எழுந்துள்ளது.
ஒரு கட்டத்தில் மனைவிக்கு வேறு ஆணுடன் பழக்கம் இருக்குமோ? என்ற சந்தேகத்தில், தினமும் வேலைக்கு செல்லும்போது அவரை பாலோ செய்துள்ளார். அது துர்காவிற்கு தெரியவர, குடும்பத்தில் பெரும் விரிசல் விழுந்தது. சம்பவத்தன்று நடத்தையை காரணம்காட்டி சண்டை போட்ட தேவுடு, கொடூர புத்தியில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல் செட்டப் செய்துள்ளார். அப்போது துர்காவை தேடிக்கொண்டு அவருக்குத் தெரிந்த பெண் ஒருவர், வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கத்தியுள்ளார். அதனால் அச்சத்தில் வீட்டின் கதவை உட்புறமாக தாளிட்டு கொண்ட தேவூடு, பிரிட்ஜ் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்.
அப்போது துர்காவின் கணவர் தேவுடு எங்கே? என விசாரிக்க அவருடைய செல்போன், மோட்டார் பைக் வீட்டிலேயே இருந்தன. மேலும், துர்காவின் மரணம் தற்கொலையல்ல…! கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்காக அடையாளம் தெரிவதாக, மருத்துவர்களும் அதிர்ச்சி அளித்தனர். இதனால் காணாமல்போன கணவன், தேவுடு மீது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து வீடு முழுவதும் தீவிரமாக தேடிய போலீசார், பிரிட்ஜ் பின்னால் ஒளிந்திருந்த தேவுடைப் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மனைவியின் ஒழுக்கம் தொடர்பான சந்தேகத்தில், ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்ததாக தேவுடு ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Feb 27, 2026 10:10 PM IST
மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்… தற்கொலைபோல் சித்தரித்துத் தப்பிக்க ப்ளான்… அரக்கனான கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்…

