Last Updated:
மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் ஆறு பேர் பரிதாபமாக பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடந்த படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ், கமாரியாவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 15 பேர் ஜபல்பூர் அருகே உள்ள பர்கி அணைப் பகுதியில் சுற்றுலாப் படகில் பயணம் செய்தனர்.
அவர்களுடன் சேர்த்து 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அந்த சொகுசுப் படகு, அதீத காற்றால் நிலை தடுமாறி நீரில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் நீரில் மூழ்கி மாயமான நிலையில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதில் காமராஜ், அவரது மனைவி, மகன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காமராஜின் ஒரு மகன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும், ஒரு தாய் தனது 3 வயது மகனை இறுக அணைத்தபடி உயிரிழந்து கிடந்த காட்சி காண்போரை கலங்க வைத்தது. இந்த நிலையில், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மோகன் யாதவ், படகு போக்குவரத்திற்குத் தற்காலிகத் தடை விதித்தார்.


