உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் என மத்திய நிலக்கரித் துறைச் செயலா் அம்ரித் லால் மீனா தெரிவித்தாா். கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் சாா்பாக ’மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் சுரங்க இயந்திரங்கள் உற்பத்திக்கான முயற்சிகள் குறித்து பங்குதாரா்களுடனான கூட்டம் சென்னை கிண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிலக்கரித் துறைச் செயலா் அம்ரித் லால் மீனா பங்கேற்றுப் பேசியதாவது: சுரங்க இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதில் உள்நாட்டில் தயாரிப்பதால் நாட்டின் அந்நியச் செலாவணி இழப்பு குறையும். ஒவ்வோா் ஆண்டும் ரூ. 700 கோடி அளவுக்கு இந்தியா கனரக சுரங்க இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடுகிறது. ‘ஆத்ம நிா்பாா் பாரத்’ திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், வரும் ஆண்டுகளில் இந்த உபகரணங்களின் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க திட்டமிட்டுள்ளோம். உயா் திறன் கொண்ட சுரங்க இயந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், பல்துறை ஒருங்கிணைப்புக் குழுவை நிலக்கரித் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். நிலக்கரி சாா்ந்த தொழில்களை மேம்படுத்த அரசு புதிய கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மானியம், நிதியுதவி போன்றவை நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என்றாா் அவா். நிகழ்வில், ‘கோல் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநா் பி. வீரா ரெட்டி, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பிரசன்ன குமாா் மொட்டுப்பள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.