Last Updated:
டெல்லி சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைச் சந்தித்துள்ளார்.
டெல்லி சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் நடந்த விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பு முடிந்து அன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ பேசவில்லை. பொதுக்குழுவில் நடந்த விவரங்கள் குறித்து பேசினேன். எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தேன்” என்று மட்டும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், டெல்லியில் நடைபெறவுள்ள பெரும்பிடுகு முத்தரையருக்குத் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாகக் கூறினார்.
இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசியுள்ளார்.
இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களை சந்தித்து, கடந்த 32 நாட்களில் 67 கட்சி மாவட்டங்களில் உள்ள 36 கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற“தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” யாத்திரையின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை… pic.twitter.com/bby4bdmAgZ
— Nainar Nagenthran (@NainarBJP) December 13, 2025
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசியல் நிலவரம் மற்றும் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள நயினார் நாகேந்திரன், “இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைச் சந்தித்து, கடந்த 32 நாட்களில் 67 கட்சி மாவட்டங்களில் உள்ள 36 கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் யாத்திரையின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
December 13, 2025 6:37 PM IST


