Last Updated:
மத்திய கிழக்கு போர் காரணமாக இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானில் அணுகுண்டுகள் தயாரிக்கும் முயற்சி நடப்பதாக குற்றஞ்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 2ஆவது நாளாக தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்குப் பகுதியில் கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன.
வடமேற்கு ஈரானில் உள்ள கெர்மன்ஷாவில் உள்ள இராணுவ தளத்திற்கு அருகே வான் வழி தாக்குதல்களால் புகை மண்டலமாக காட்சியளித்தது. பதுங்கு குழிகளில் இருக்கும் ஈரானின் முக்கிய தலைவர்களை கொல்ல, அமெரிக்காவின் பங்க்கர் பஸ்டர் வகை குண்டுகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஆபரேஷன் ரோரிங் லயன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரான் தலைநகர் டெஹ்ரானின் மையப்பகுதியில் முதன்முறையாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் 40 தளபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளை ஒரே நிமிடத்திற்குள் அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.
போர் மேகம் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கவும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், உதவி தேவைப்படுவோர் உடனடியாக இந்தியத் தூதரகத்தை அணுகவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
PM Modi will chair a meeting of the Cabinet Committee on Security (CCS) on returning to Delhi tonight. He is expected to land in Delhi after a 2-day-long tour at around 930 pm tonight: GoI Sources pic.twitter.com/Pqxr4j3I6J
— ANI (@ANI) March 1, 2026
இந்நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு டெல்லியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சுமார் 9.30 மணிக்கு டெல்லி சென்றடைவார் எனச் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் கூட்டம் நடத்தி மத்திய கிழக்கு ஆசியப் போர் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


