நோயின்றி நலமாக வாழவே அனைவரும் விரும்புகிறார்கள். அந்த நலமான வாழ்க்கைக்கான அடிப்படைத் தகுதியே சத்து நிறைந்த உணவு.
இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில், உணவில் பல்வேறு தெரிவுகள் கிடைக்கின்றன. ஆனால், உடல்நிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப சரியான உணவுவகைகளை தேர்ந்தெடுப்பதே ஆரோக்கியத்தின் ரகசியம். இதனைச் செய்யாததால் தான், நீரிழிவு, ரத்தஅழுத்தம், இதய நோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், சமீபத்திய ஆய்வுகள் ஒன்று, மத்திய கிழக்கு நாடுகளின் உணவுமுறை (Mediterranean Diet) — நீரிழிவு உள்ளிட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது என உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உணவுமுறையில் பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மீன்கள், மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள் அடங்கும்.
ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி, இந்த உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள், அதை பின்பற்றாதவர்களை விட இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயம் 30% வரை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், ஸ்பெயின் மருத்துவமனைகளில் ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், இந்த உணவுமுறையுடன் வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து, எடையை 7% வரை குறைத்தவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க முடிந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உணவுமுறை முதுமை காரணமான நினைவாற்றல் இழப்பு (அல்சைமர்ஸ்) நோயின் அபாயத்தையும் குறைக்கக்கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வயது ஒரு தடையல்ல — சரியான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி, எடைக் கட்டுப்பாடு ஆகியவை இணைந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை அனைவரும் அடைய முடியும் என்பதே இந்த ஆய்வுகளின் முக்கிய செய்தி.




