மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் விடுதிகளில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
மார்ச் 3 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்தவொரு சம்பவத்தையும் தடுக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்துமாறு காவல்துறை மா அதிபர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
உயர்ந்த மட்ட பாதுகாப்பு
அதன்படி, தூதரகங்கள், உயர் ஸ்தானிகராலயங்கள் மற்றும் அவற்றின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பிற இணைக்கப்பட்ட வளாகங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையினால், வெளிநாட்டு தூதரகங்களை குறிவைத்து தாக்குதல்கள் மற்றும் போராட்டங்கள் இடம்பெறக் கூடும் என்ற கவலைகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதரக வளாகங்களை முற்றுகையிடவோ அல்லது கட்டுப்பாட்டை மீறக்கூடிய கொந்தளிப்பான ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ முயற்சிப்பதைத் தடுப்பதில் காவல்துறை கவனம் செலுத்துகிறது.
பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணி
தூதரக பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பு மீறல்கள் ஏற்படாமல் இருக்க பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் நடமாடும் ரோந்துப் பிரிவுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்களின் வழிபாட்டு இடங்களான சபாத் மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பொது பாதுகாப்பு அமைச்சு மேற்பார்வையிட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு வழக்கம் போல் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஆதரவளிக்க ஆயுதப்படைகளின் உதவி கோரப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

