தோஹா | பிப்ரவரி 28, 2026 :
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இராணுவ மோதல்களைத் தொடர்ந்து, கத்தாரில் வசிக்கும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய போர்ச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து, விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மலேசியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தோடு அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். கத்தார் அரசு மற்றும் மலேசியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். இதுவரை தூதரகத்தில் பதிவு செய்யாத மலேசியர்கள், e-Consular அகப்பக்கம் வழியாக உடனடியாகப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தூதரக உதவியைப் பெற விரும்புவோர் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: அவசரகால தொலைபேசி: +974 3374 6733 (அவசர தேவைகளுக்கு மட்டும்), மின்னஞ்சல்: [email protected]
இன்று (பிப்ரவரி 28) அதிகாலை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது “முன்னெச்சரிக்கை தாக்குதல்களை” (Preemptive Strikes) நடத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தோஹா மற்றும் ஜெடா நோக்கிய தங்களின் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன அல்லது மாற்றுப் பாதையில் இயக்கி வருகின்றன.




