மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்வததையும், வரிசையில் நிற்பதையும் காணமுடிகிறது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த டி.ஜே. ராஜகருணா,
இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எம்மால் ஒரு மாத காலத்திற்குத் தடையின்றி இயங்க முடியும்.
எனவே 37 நாட்களுக்கு தேவையான பெற்றோலும், 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளது.
அத்துடன் 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலதிகமாக எந்தவொரு கப்பலும் வராவிட்டாலும் கூட, எம்மால் இந்தக் குறிப்பிட்ட நாட்களுக்கு எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும்.
அடுத்ததாக, நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவதில்லை. கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால் நாம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்தே இவற்றை இறக்குமதி செய்கிறோம்.
மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் எங்களிடம் உள்ள கையிருப்பு ஒரு மாதத்திற்குப் போதுமானதாகும்.
எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். R

