மத்திய கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பிராந்தியத்திற்கு எவ்வித நன்மையையும் அளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு அவை பதற்றங்களை அதிகரித்து மோதல்களை தீவிரப்படுத்தி பாதுகாப்பற்ற சூழலையே உருவாக்குகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) இதனை தெரிவித்துள்ளார்.
முதன்மையான காரணம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவைச் (Sergei Lavrov) சந்தித்த போதே பெசெஷ்கியான் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் மோதல்களுக்கு அமெரிக்காவின் தேவையற்ற தலையீடுகளும் பிளவுபடுத்தும் கொள்கைகளுமே முதன்மையான காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் எவ்வித சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை மாறாகப் பிராந்தியப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் நிலையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமாயின் அது பிராந்திய நாடுகளின் பரஸ்பர நம்பிக்கை, கூட்டுப் பங்கேற்பு மற்றும் அனைத்துத் தரப்பினரின் சட்டப்பூர்வ நலன்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும் என பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சவால்கள் மற்றும் சிக்கல்களைப் பேச்சுவார்த்தை, பரஸ்பர புரிதல் மற்றும் பிராந்திய கட்டமைப்பு வழிமுறைகள் மூலமாகத் தீர்த்துக்கொள்ள ஈரான் தயாராக உள்ளதாக அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

