மத்திய அரசின் மசோதாவுக்கு இணங்குவதாக அறிவித்துள்ளது ஃபேண்டஸி விளையாட்டு நிறுவனமான Dream11.
நாடெங்கும் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டங்களுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. அத்துடன், ஆன்லைன் சூதாட்ட கேம்கள் வாயிலாக அந்நிய பணப் பரிவர்த்தனை மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகளும் தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளன.
இவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விளையாட்டு கட்டுப்பாடு மற்றும் அபிவிருத்தி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, இ-ஸ்போர்ட்ஸ், சோஷியல் கேமிங், பணம் வைத்து விளையாடும் கேம்கள் மற்றும் கல்வி தொடர்பான ஆன்லைன் விளையாட்டுகளைக் கண்காணிக்க புதிய அமைப்பு ஏற்படுத்தப்படுவதுடன், ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடவோ, பரிசுத் தொகை வழங்கவோ தடை விதிக்கப்பட்டது.
சட்டத்தை மீறி யாராவது ஆன்லைன் சூதாட்டம் அல்லது பணம் செலுத்தி விளையாடும் ஆட்டங்களை நடத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது 1 கோடி ரூபாய் வரை அபராதமோ விதிக்கப்படும். டிரீம் 11, ரம்மி சர்க்கிள், மை சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் இந்த சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து டிரீம் 11 ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், டிரீம் 11-ல் பணம் செலுத்தி விளையாடக்கூடிய அனைத்து போட்டிகளையும் நிறுத்திவிட்டு, இலவசமாக விளையாடக்கூடிய ஆன்லைன் சமூக விளையாட்டிற்கு முழுமையாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் அதே அறிக்கையில், “18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஸ்போர்ட்ஸ் டெக் நிறுவனமாக இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது, நாங்கள் அமெரிக்காவின் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் துறையின் அளவில் 1% கூட இல்லை.
ஆனால், இந்தியர்களின் இந்த ஆர்வம், நம்பிக்கை மற்றும் மேட் இன் இந்தியா, ஃபார் இந்தியா என்ற உணர்வின் மூலம் உலகின் மிகப்பெரிய ஃபேண்டஸி விளையாட்டு தளமாக டிரீம் 11 மாறியது. நாங்கள் எப்போதும் சட்டத்தை மதிக்கும் நிறுவனமாக இருந்து வருகிறோம், எப்போதும் இருப்போம், மேலும் சட்டங்களுக்கு இணங்க எங்கள் வணிகத்தை நடத்தி வருகிறோம்.
முற்போக்கான விதிமுறைகள் சரியான பாதையாக இருந்திருக்கும் என்று நாங்கள் நம்பினாலும் தொடர்ந்து சட்டத்தை மதிப்போம். அதன்படி, “ஆன்லைன் கேமிங் சட்டத்தின் விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025″வுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்போம். இந்தியாவை உலகளாவிய விளையாட்டு வல்லரசாக மாற்றும் நமது மாண்புமிகு பிரதமரின் லட்சியத்தை ஆதரிப்போம்” என்று கூறி, டிரீம் 11-ல் பணம் செலுத்தி விளையாடக்கூடிய அனைத்து போட்டிகளையும் நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 23, 2025 10:25 AM IST

