நாட்டில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்க மற்றும் முதல்முறை வேலைக்கு சேரும் புதிய ஊழியர்களை ஆதரிக்கவும் மத்திய அரசு இந்த PMVBRY திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2025 அன்று அங்கீகரிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டமானது, ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும் மற்றும் புதிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய ஆதரவை அளிக்கும் என சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டாவியா குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மற்றும் முதல்முறையாக பணியமர்த்தப்படுபவர்களும் PMVBRY திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பலன் பெற தகுதியானவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் Part A முதல்முறையாக பணிபுரியும் ஊழியர்களை மையமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் Part B ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு பயனளிக்கிறது. Part A-வின் கீழ், மொத்த ஊதியம் ரூ.1 லட்சம் வரை உள்ள ஊழியர்கள் இந்த திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். இதற்கிடையே இந்த திட்டத்தின் Part B-யானது நிறுவனங்களுக்கு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு சலுகைகளை வழங்குகிறது.
50-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தது இரண்டு கூடுதல் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், அதே நேரத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் 5 பேரை நியமிக்க வேண்டும். அதேபோல புதிய கூடுதல் பணியாளர்களை குறைந்தது ஆறு மாதங்களுக்கு தக்கவைத்துக் கொள்ள வேண்டும். EPF & MP சட்டம், 1952-இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கூட இதில் அடங்கும்.
Part A-வின் கீழ் ஜூலை 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரை தங்களின் முதல் வேலையைப் பெறும் இளைஞர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.15,000 நிதி உதவி கிடைக்கும். இந்தத் தொகை DBT மூலம் இரண்டு தவணைகளில் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். பணம் செலுத்துவதற்கு ஆதார்-பிரிட்ஜ்டு பேமென்ட் சிஸ்டம் (ABPS) பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் முதல்முறையாக பணியமர்த்தப்படுபவர்கள், ஒரு மாத அடிப்படை சம்பளத்திற்கு சமமான, அதிகபட்சமாக ரூ.15,000 வரை, இரண்டு தவணைகளில் வழங்கப்படும் ஊக்கத் தொகையை ஒருமுறை பெறலாம்.
அதேபோல இதே திட்டத்தின் Part B-யின் கீழ் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பு உள்ள ஒவ்வொரு கூடுதல் ஊழியருக்கும், அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, ஊக்கத்தொகை 3 மற்றும் 4 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படக்கூடும். Part B-யின் கீழ் நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகை வரம்பானது மாதத்திற்கு ரூ.10,000 சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு ரூ.1,000, ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையிலான சம்பளம் வழங்குவதற்கு ரூ.2,000 மற்றும் ரூ.30,000 வரை சம்பளத்திற்கு ரூ.3,000 ஆகும்.
நன்மைகளை எவ்வாறு பெறுவது?
- ஊழியர்கள் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் பதிவு செய்யலாம் அல்லது UMANG ஆப் வழியாக தங்கள் UAN நம்பரை அப்லோட் செய்யலாம்.
- நிறுவனங்கள் UMANG ஆப் பயன்படுத்தி எலெக்ட்ரானிக் சலான்-கம்-ரிட்டர்ன் (ECR) தாக்கல் செய்து, ஏற்கனவே உள்ள மற்றும் புதிய ஊழியர்களுக்கான UAN-களை ஓபன் செய்ய வேண்டும்.
இந்த திட்டம் பல்வேறு துறைகளில், குறிப்பாக உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முதல்முறையாக ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்கும் மற்றும் வணிகங்கள் தங்கள் பணியாளர்களை விரிவுப்படுத்த ஊக்குவிக்கும்.
August 21, 2025 12:39 PM IST

