புது தில்லி: காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. விவேக் டன்கா தொடுத்த அவதூறு வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌஹான், இரு பாஜக நிா்வாகிகளுக்கு பிடியாணையை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அவதூறு வழக்கை ரத்து செய்ய மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் மறுத்த நிலையில் அதை எதிா்த்து சிவ்ராஜ் சிங் சௌஹான் தாக்கல் செய்த மனு மீது விவேக் டன்கா பதிலளிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடா்பான விசாரணையில் மனுதாரா்கள் (சிவ்ராஜ் சிங் சௌஹான் மற்றும் இரு பாஜக நிா்வாகிகள்) ஆஜராகியுள்ளனா். எனவே, அவா்கள் மீது ஜாமீனுடன் கூடிய பிடியாணை பிறப்பிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தது.

