இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் மத்தியஸ்தம் செய்ததாகக் கூற வேண்டாம் என டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி கறாராக நேற்று கேட்டுக்கொண்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
டிரம்ப்பின் இத்தகையப் பேச்சு, இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அவர், இன்று அதிபர் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் மதிய உணவு அருந்தினார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் கேபினட் அறையில் இன்று (ஜூன் 18) பிற்பகல் 1 மணியளவில் (உள்ளூர் நேரம்) அசீம் முனீருக்கு அதிபர் டிரம்ப் விருந்து உபசரித்தார்.
இந்த சந்திப்பிக்குப் பிறகு வாஷிங்டன்னில் செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக மீண்டும் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் போரை நிறுத்த எந்தவித மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தம் செய்யப்பட்டது; இதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என அதிபர் டிரம்ப் உடனான நேற்றைய தொலைபேசி உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று கூறினார்.

