Last Updated:
மத்தியப் பிரதேசத்தில் ஆபாச பாடல்களை ஒலிக்கவிட்டு உடற்பயிற்சி மேற்கொண்டதை தட்டிக் கேட்ட இளம்பெண்ணிடம் ஜிம் பாய்ஸ் அத்துமீறியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் இளம்பெண்ணிடம் வம்பிழுத்த கும்பலை தட்டிக்கேட்ட இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உற்சாகம் என்ற பெயரில் அட்டூழியம் செய்த ஆறு பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுமா?
ஆபாச பாடல்களை ஒலிக்கவிட்டு உடற்பயிற்சி மேற்கொண்டதை தட்டிக் கேட்ட இளம்பெண்ணிடம் ஜிம் பாய்ஸ் அத்துமீறியுள்ளனர். அதைக் கண்டு பொங்கியெழுந்த இளைஞர் அடாவடி கும்பலிடம் கேள்வி கேட்டதால் நிலவரம் கலவரமாகியுள்ளது. தனியாக சிக்கிய இளைஞரிடம், 6 பேர் தங்களது வீரத்தை காட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் கம்பி சுத்தியுள்ளார். உடற்பயிற்சிக் கூடம் குங்பூ களமானதில் நடந்தது என்ன?
மத்தியப் பிரதேசம் மாநிலம் கோட்வாலி பகுதியில் நவீன உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு, ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களது உடல்திறனை மேம்படுத்த பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஒரு சில பெண்கள் தனித்தனியாக உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். மறுபுறம் ஆறு பேர் கும்பல் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுப்பதைத் தவிர்த்துவிட்டு மற்ற வேலைகளில் ஈடுபட்டனர். அதிலும், ஆபாசமான பாடல்களை, செவித்திறன் பாதிக்கும் வகையில் ஒலிக்கவிட்டு அலப்பறை கூட்டியுள்ளனர்.
அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த இளம்பெண், ஒன்று பாடலை மாற்றுங்கள் அல்லது சவுண்டைக் குறையுங்கள் என குரலை உயர்த்திப் பேசியுள்ளார். அதற்கு அடாவடி ஜிம் பாய்ஸ், அப்படித்தான் பாடல் போடுவோம் என்று தெனாவட்டாக கூறியுள்ளனர். அந்தப் பெண்ணை மிரட்டும் வகையில் அவர்கள் சுத்துப் போட்டுள்ளனர். அதைப் பார்த்த ரிஷி மிஸ்ரா என்ற இளைஞர், அடாவடி கும்பலை தட்டிக் கேட்டுள்ளார். அதில், வாக்குவாதம் முற்றியதில் ஒருவருக்கொருவர் கையால் பேசியுள்ளனர். 6 பேர் சுற்றிவளைத்து ரிஷி மிஸ்ராவை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் நிலைகுலைந்துள்ளார்.
இதனிடையே, சற்று தெளிவானதும் எழுந்து நடந்த ரிஷிமிஸ்ராவிடம் மீண்டும் அவர்கள் வம்பு இழுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ரிஷி, உடற்பயிற்சிக் கருவியை எடுத்து தாக்க முற்பட்டுள்ளார். ஆனால், எதிர்தரப்பினர் அவருக்கு கிடுக்கிப்பிடி போட்டு மீண்டும் தாக்கியுள்ளனர். அதைப் பார்த்த இளம்பெண், தனது கையில் கம்பியை எடுத்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்தெடுத்துள்ளார். இறுதியாக அங்கிருந்த அனைவரும் சண்டையை விலக்கி விட்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் ஆபாச பாடல்களை ஒலிக்கவிட்டு இளம்பெண்ணிடம் வம்பிழுத்த கும்பலை தட்டிக்கேட்ட இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
மத்தியப் பிரதேசம்: உடற்பயிற்சிக் கூடத்தில் இளம்பெண்ணிடம் வம்பிழுத்த கும்பல் – தட்டிக்கேட்ட இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்…


