கனகராசா சரவணன்
மட்டக்களப்பு புதுரார் பிரதேசத்திலுள்ள மதுபானசாலையில் மது அருந்திய குழுவிடம் பணம் கேட்ட அதன் முகாமையாளரை மதுபான போத்தலிலால் தலையில் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவரை வெள்ளிக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் மதுபானசாலையில் கடந்த 9ம் திகதி இரவு மது அருந்துவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் சென்று மதுபானம் அருந்தியுள்ளனர்.
அருந்திய மதுபானத்துக்கான பணத்தை அந்த முகாமையாளர் கேட்டபோது முகாமையாளரின் அறைக்குள் சென்று அவர் மீது மதுபானப் போத்தலால் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த ஒருவரை வெள்ளிக்கிழமை (16) கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.R

