கிளிநொச்சி பகுதியில் மதுபான போத்தல் ஒன்றினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – தர்மபுரம் காவல்நிலையத்தின் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (09.04.2026) இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் கோரியுள்ளார்
முறைப்பாட்டாளர் 8 ஆம் திகதி புதன்கிழமை கொள்வனவு செய்த புதிய மோட்டார் சைக்கிளை இலக்கத் தகடு மற்றும் வருமான வரி அனுமதிப்பத்திரம் இன்றி செலுத்தியமைக்காக, சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் ஆரம்பத்தில் 10,000 ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ள நிலையில் அவ்வளவு தொகையை வழங்க முடியாது என முறைப்பாட்டாளர் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர் மதுபான போத்தல் ஒன்றைக் கோரியுள்ளார்.
அதனை வழங்கும் வரை முறைப்பாட்டாளரின் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வழங்கப்பட்டிருந்த கடிதத்தை பிணையாக வைத்துக்கொண்டு, நேற்று அந்த மதுபான போத்தலை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

