மதுபானசாலை அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் தான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசியலிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், போலி பிரச்சாரத்துக்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டுமென்றார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “எவருக்காவது மதுபானசாலை அனுமதிப்பத்திரத்துக்கு சிபாரிசு செய்திருந்தால் அதை உறுதிப்படுத்தும் பட்சத்தில் அரசியலிலிருந்து என்னை விலக்கி விடுங்கள். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து மதுபானசாலை தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதை ஒருவர் எனது கடிதத் தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.
மக்களிடம் ஒன்றை சொல்கிறேன். மக்கள் என்னை நம்புங்கள். மதுபானத்துக்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பின்பு அரசியலிலிருந்து விலகுவேன்.
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.
தமிழரசுக் கட்சித் தலைவராக ஜனநாயக ரீதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன். தலைவராக தெரிவு செய்த என்னை, எமது கட்சிக்குள் வழக்குப் போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.
நாம் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது” எனத் தெரிவித்தார்.
The post மதுபானசாலை அனுமதி பெற்றதை உறுதிப்படுத்தினால் நான் அரசியலிலிருந்து விலகுவேன் appeared first on Thinakaran.
