Last Updated:
மத்தியபிரதேசத்தில், மதம் மாறி திருமணம் செய்ய மறுத்த பாக்யஸ்ரீ நாம்தேவ் தனுக் என்பவரை ஷேக் ரயீஸ் கத்தியால் கொலை செய்தார்.
மத்தியபிரதேசத்தில் மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து மிரட்டி வந்த நபர், அதற்கு ஒப்புக் கொள்ளாத பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், நவாரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் 35 வயதான பாக்யஸ்ரீ நாம்தேவ் தனுக். இவரிடம் அதே ஊரை சேர்ந்த 42 வயதான ஷேக் ரயீஸ் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பாக்யஸ்ரீயை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அதுவும் இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்யவேண்டும் என்று ஷேக் ரயீஸ் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பாக்யஸ்ரீயோ ரயீஸை கண்டாலே எரிச்சல் அடைந்து வந்துள்ளார். தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தனக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்திக் கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தமாத ரயீஸ், தொடர்ந்து பாக்யஸ்ரீக்கு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கத்தியுடன் பாக்கியஸ்ரீயை பார்க்க சென்ற ரயீஸ், வழக்கம் போல், அவரை அடித்து துன்புறுத்தி திருமணத்திற்கு வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு பாக்கியஸ்ரீ கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே கடும் ஆத்திரமடைந்த ரயீஸ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்ததுடன், அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.
இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த பாக்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷேக் ரயீஸை கைது செய்தனர். ஷேக் மீது 4 நாட்களுக்கு முன்பு பாக்யஸ்ரீ உள்ளூர் போலீஸ் செக்போஸ்டில் புகார் செய்திருக்கிறார். ஆனால் அப்போது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக விட்டுள்ளனர்.
அதன் விளைவு தான் தற்போது கொலை வரை சென்றுள்ளது என பாக்யஸ்ரீயின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புகார் கொடுத்த போதே ரயீஸ் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று தங்களது மகள் உயிரோடு இருந்திருப்பார் என அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். போலீசாரின் அலட்சியப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த ஷேக் ரயீஸின் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாக்யஸ்ரீ உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலைக்கு பின்னணியில் லவ் ஜிகாத் நோக்கம் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும் இறுதிச்சடங்கை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாக்யஸ்ரீயின் சகோதரி சுபத்ரா கூறுகையில்,”ஷேக் எனது சகோதரியின் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். நீண்ட நாட்களாக மதம் மாறி திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்.” என தெரிவித்தார்.
இதனிடையே, குற்றவாளியான ஷேக் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்த நபர், அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
August 05, 2025 10:17 PM IST


