Last Updated:
மணிப்பூரில் யம்நம் கேம்சந்த் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றார்.
மணிப்பூரின் புதிய முதலமைச்சராக பாஜகவின் யம்நம் கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்றுள்ளார். மெய்தி இனத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சர் வேட்பாளரானது எப்படி? என விரிவாக பார்க்கலாம்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி – குக்கி இன மக்களிடையே கலவரம் வெடித்தது. பழங்குடி அந்தஸ்து கோரி மெய்தி மக்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி மக்களும் நடத்திய போராட்டத்தில் வெடித்த கலவரத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரிந்தது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கலவரத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்வு என சொல்லில் அடங்கா துயரச் சம்பவங்கள் மணிப்பூரில் அரங்கேறின.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மணிப்பூரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் பிரேன் சிங் தவறியதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்பப் பெற்றது.
அடுத்தடுத்து அரசியல் நெருக்கடியால் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி தனது முதலமைச்சர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து பிப்ரவரி 13ஆம் தேதி மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், மீண்டும் மக்களாட்சியை நிறுவ பாஜக திட்டமிட்டது. அதன்படி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் மணிப்பூர் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எம்எல்ஏவாக தேர்வான முதல் முறையிலேயே சபாநாயகர் பொறுப்பு வகித்த யம்நம் கேம்சந்த், முன்னாள் முதலமைச்சர் பிரேன் சிங் அமைச்சரவையில் கல்வி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மணிப்பூர் ஆளுநர் அஜய்குமார் பல்லா, பாஜகவைச் சேர்ந்த யம்நம் கேம்சந்த்திற்கு முதலமைச்சராக இன்று பதவி பிரமாணம் செய்துவைத்தார்.


