Last Updated:
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் செயல்படும் என அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
மணிக்கு 320 கி.மீ வேகத்தில் சீறி பாயும் நாட்டின் முதல் புல்லட் ரயில் அடுத்த ஆண்டு சுதந்திரத் தினத்தன்று தனது சேவையை தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
புல்லட் போன்று அதிவேகத்தில் சீறி பாயும் புல்லட் ரயில்கள், ஜப்பான், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா ஆகிய நாடுகளில் தொலை தூர நகரங்களை குறைந்த நேர பயணங்கள் மூலம் இணைத்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
மகாராஷ்டிராவின் மும்பை முதல் குஜராத்தின் அகமதாபாத் வரையிலான இந்த புல்லட் ரயில் திட்டம் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால், கட்டுமானப் பணிகள் தாமதமாகின.
ஜப்பான் அரசின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் நடைபெற்று வரும் இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு 85 ஆயிரத்து 801 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. இதுவரை 412 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடித்தளப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 405 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக சூரத்தில் இருந்து பிலிமோரா வரை 100 கிலோ மீட்டரிலும், பின்னர் வாபியில் இருந்து சூரத் வரை 50 கிலோ மீட்டரையும் புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் வாபியில் இருந்து அகமதாபாத் வரையிலும் அதன் பிறகு தானேவில் இருந்து அகமதாபாத் வரையிலும் என படிபடியாக திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த சேவை மூலம், அகமதாபாத்தில் உள்ள சபர்மதிக்கும் மும்பைக்கும் இடையேயான 508 கிலோ மீட்டர் தூரத்தை, மணிக்கு 320 கி.மீ வேகத்தில் 1 மணி 58 நிமிடங்களில் கடக்க முடியும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இரு மாநிலங்களின் வதோதரா, பரூச், சூரத், வாபி, தானே உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் நின்று செல்வதால் மொத்த பயண நேரம் 2 மணி 17 நிமிடங்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேவை தமிழ்நாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு 56 நிமிடங்களிலும், மதுரைக்கு 1 மணி 18 நிமிடங்களிலும், கோவைக்கு ஒரு மணி 27 நிமிடங்களிலும் சென்றடைய முடியும்.


