நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து குறைந்தது 675 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களைக் காணவில்லை என்றும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, மேலும் 2,498 பேரைக் காணவில்லை என நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை தொகுத்ததன் படி, கடந்த ஆறு மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 பேராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிவாரணப் பணிகள்
இருப்பினும், முக்கியமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் , அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும், நேபாளத்தின் மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தொகுத்த விவரங்களின்படி, நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 900 நேபாள ஊழியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை அந்தத் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 361 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நேபாள-சீன எல்லை
திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கு, நேபாள-சீன எல்லைக்கு அருகே, குறிப்பாக தொலைதூர ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அமைந்திருந்த பல நீர்மின் திட்டங்களைச் சேதப்படுத்தியது.

இதன் விளைவாக, பல தொழிலாளர்கள் கட்டுமானப் பகுதிகளிலும் சுரங்கங்களிலும் இன்னும் சிக்கியுள்ளனர்.
அவர்களைத் தொடர்புகொள்ள இயலாத நிலையில், சுரங்கங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க உதவுவதற்காக, சுரங்க மீட்பு நிபுணர்களை இந்தியா மற்றும் சீனாவிடம் நேபாள அரசு கோரியுள்ளது.
இரு நாடுகளின் குழுக்களும் இன்று நேபாளம் வந்தடைந்த நிலையில், மேலும் பணியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

