Last Updated:
பிகார் மாநிலம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பக்சர் பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி மேடையில், மணப்பெண்ணை திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு இளைஞர் ஒருவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் திருமண மேடையில் மாப்பிள்ளையுடன் நின்றிருந்த மணப்பெண்ணை முன்னாள் காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. உறவினர்கள் கண் எதிரே குண்டடிப்பட்டு மயங்கி விழுந்த மணப்பெண்ணுக்கு நடந்தது என்ன? திருமண விழா மேடையில் கணவன் கண் எதிரே இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதியின் பின்னணி என்ன?
பிகார் மாநிலம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பக்சர் பகுதியில் ஆர்த்தி என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் திருமணம் முடிந்தது. அன்றிரவு உறவினர்கள் ஆரவாரத்துடன் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி மேடையில், மணமகன் – மணப்பெண்ணிற்கு குங்குமம் வைக்கும் சடங்கு நடந்தது. அப்போது திடீரென்று அங்கு வந்த தீனபந்த் என்ற இளைஞர், கையிலிருந்த துப்பாக்கியால் மணப்பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதில் வயிற்றில் குண்டு துளைத்து ஆர்த்தி அங்கேயே சுருண்டு விழுந்தார்.
கண் எதிரே மனைவியைத் துப்பாக்கியால் சுட்டதைப் பார்த்து மணமகன் அரண்டு போக, சுற்றி நின்றிருந்த உறவினர்களும் கதிகலங்கிப் போனார்கள். பின்னர், ஆர்த்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆர்த்தியின் முன்னாள் காதலனான தீனபந்த் என்பதும், அவரது நடவடிக்கை பிடிக்கவில்லை என ஆர்த்தி அவரது காதலை சமீபத்தில் பிரேக் அப் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தப்பி ஓடிய தீனபந்த்தை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். ஏற்கனவே அவர் போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் பிடிபட்டால் மட்டுமே துப்பாக்கிச்சூட்டின் உண்மைப் பின்னணி என்ன என்பது குறித்து தெரியவரும்.


