நவீன உலகின் பல்வேறு பரிமாணங்களுக்கு உட்பட்டுச் செல்கின்ற இன்றைய காலத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பாரம்பரிய சடங்குகளை தலைமுறை தலைமுறையாக பேணி பாதுகாத்து வருகின்ற தன்மை காணப்படுகிறது. பாரம்பரிய சடங்குகளை இன்றும் பேணிப் பாதுகாத்து, தொடர்ந்து நிகழ்த்தி வருகின்ற பெருமை மட்டக்களப்பினையே சாரும். 
அங்குள்ள புராதன வரலாற்று பண்பாட்டுக் கிராமமாகவும் கண்ணகி அம்மன் வரலாற்றைக் கூறுவதாகவும் உள்ள காவியத்தில் எட்டுத்திக்கு புகழ், கற்றவர்கள் வாழும் வந்தாறுமூலை எனவும் போற்றும் இவ்விடத்தில் கொம்பு முறி விளையாட்டினை மழை வேண்டி நாடத்துகின்ற போக்கு காணப்படுகிறது. இவை அச் சமூகத்தின் அடையாளத்தினை வெளிப்படுத்துவனவாகவும் காணப்படுகின்றன.
இக் கொம்பு முறிச் சடங்கு வருடம் தோறும் இடம் பெறுவதில்லை. குறிப்பாக மழையற்று காணப்படும் சந்தர்ப்பங்களில் விவசாயிகள் மழை வேண்டி இவ் விளையாட்டினை நிகழ்த்துவர். ஒரு சில வருடங்களுக்கு பின்னர் இம்முறை இவ் விளையாட்டானது நிகழ்த்தப்பட்டது.
கொம்பு முறி விளையாட்டுக்கென கதையொன்று உள்ளது.

அதாவது ராமநாட்டின் சிற்றூரான கிடாக்குழியில் இருந்து கதிர்காமத்திற்கு யாத்திரியாக வந்த சித்தர் ஒருவர், இலங்கைத் தீவின் கிழக்கே உள்ள முந்தன் குமாரவெளி வேரோடியலைக்கு வடக்கே உள்ள பாதை வழியாக உள்ள வனாந்தரமாகவும், பூஞ்சோலையாகவும், பருவங்களுக்கு கனிதரும் மரச் சோலைகளாலும் கொடிகளாலும் சூழப்பட்டு வெயிலோ, பறவைகளோ உள்ளே நுழையா வண்ணம் குளிர்ச்சியும், பூக்களின் நறுமணம் வீசும் சோலை நடுவினில் பசுக்களும், காளைகளும், வானரங்களும், பறவைகளும், கடல்வழி, தூர தேசத்து வணிகர்களும் யாத்திரியர்களும், வெளியூர், உள்ளுர்வாசிகளும் ,ஆயர் சிறுவர்களும், விவசாயிகள் என அனைவரும் ஓய்வெடுத்து செல்லும் சோலையிலே நிர்முகநாகலிங்கேஸ்வரை வணங்கிவிட்டு அங்குள்ள சோலையில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது அங்கு ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த ஆயச் சிறுவர்கள் ” நீண்ட தலை முடியுடன் இருக்கும் நீங்கள் யார்” என வினாவிய போது சித்தர் தன்னைப் பற்றி சிறுவர்களிடம் கூறினார். சிறுவர்கள் சித்தரை அவரின் ஊரின் பெயரை கொண்டு கிடாக்குழியார் என்றே அழைத்தார்கள் .
சித்தர் ஒய்வெடுக்கும் தருணங்களில் ஆயச்சிறுவர்களுக்கு கொம்பு விளையாட்டினை பயிற்றுவித்தார். ஆயச்சிறுவர்கள் கொம்பு விளையாட்டை மிக ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தார்கள். அவர்கள் கொம்பு விளையாட்டைப் பற்றி சித்தரிடம் விளக்கம் கேட்கையிலே கண்ணகி வழிபாடு பற்றி எடுத்துக் கூறினார்.
கண்ணகை அம்மனை வேண்டி வழிபட்டால் வரட்சி காலங்களில் ஏற்படும் அம்மை, கொப்பளிப்பான், கண்நோய், போன்ற “அம்மன்” நோய்கள் பரவாமலும் அம்மனுக்கு விழா நடத்தினால் அவள் மகிழ்சியுற்றால் மழை பொழியுமெனவும், நோய்கள் குறையும் எனவும் கூறினார்.
ஆயச்சிறுவர்கள் சித்தர் கூறிய செய்திகளை தங்களது தாய், தந்தையாரிடம் தெரிவித்து ஊரில் உள்ள அனைவரும் சித்தரை சந்திக்கச் சென்றனர். தன்னை நாடி வந்த மக்களிடம் சித்தர் “இவ்விடத்தில் கண்ணகி உறைவாள், ஓர் கன்னிப் பெண்ணால் கண்ணகி சிலை கொண்டு வரப்பட்டு கண்ணகிக்குரிய சடங்குகள் செய்ய வேண்டும் ” எனக் கூறினார்.
ஊரில் உள்ள வனப்பகுதியில் கண்ணகி அம்மனை வேண்டி காளையர்கள் கண்ணகி கட்சி, கோவலன் கட்சி என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டு வளைந்த தடிகள் இரண்டினை ஒன்றோடு ஒன்று கொழுவி இழுத்து முறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்திருந்த காட்சியை அங்கிருந்த வேப்பம் மரநிழலில் இருந்த மூதாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தின் பின் அந்த மூதாட்டி மாயமாக மறைந்தாள்.
கொம்பு விளையாட்டை பார்ப்பதற்கு கண்ணகை அம்மன் மானிடவடிவில் வந்து காட்சி கொடுத்ததை எண்ணி ஊர் மக்கள் குரவை ஒலி எழுப்பி கண்ணகை அம்மனை வழிபட்டார்கள் எனவும் கதைகள் கூறுகின்றன. இவற்றினால் இம்மக்கள் விளையாட்டினை தொடர்ந்து நடாத்தி வருகின்றார்கள்.
இக் கொம்பு முறி விளையாட்டுப் பற்றி இக் கிராம வாசியான கணபதிப்பிள்ளையிடம் வினவியபோது :
முதலில் வடசேரி, தென்சேரி என இரண்டு அணிகளாக பிரிந்து ஆலய முன்றலில் தேங்காய் உடைத்து அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் காட்டிற்கு சென்று கொம்பு செய்வதற்கு தேவையான மரத்தினை வெட்டிக் கொண்டு வந்து இச் சடங்கினை நிகழ்த்துவார்கள்.
அங்கு உள்ள மரங்களில் தங்களுக்குரிய கொம்புகளை தேர்வு செய்து அதனை தொடர்ந்து கொம்பினை இரு தலைவர்களாக பிரிந்து தங்களது கொம்புகளை இருவரது வீட்டில் வைத்து கிணற்றுக்குள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வைப்பார்கள். அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் தங்களது கொம்பினை வளைப்பார்கள். அந்தச் சமயத்தில் ஒரு அணி ஒரு திசையிலும் மற்றய அணி எதிர்த் திசையிலும் செல்லும். இரு அணிகளும் ஒவ்வொரு அணிக்கு எதிராக பாடல்களை பாடி ஊரை சுற்றி வளைத்து வருவார்கள். அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் கொம்பு முறி நிகழ்வு இடம்பெறும். தாய் மரமாக கண்ணகி அம்மன் ஆலயம் முன்றலில் காணப்படும் மரத்தில் தென்சேரி, வடசேரி அணிகள், தங்களுக்கு தேவையான மரத்தினை வெட்டுவதற்காக, “செவ்வாய் குத்தி” பனை மரத்தை வெட்டி வருவார்கள் . பின்னர் ஆலய முன்றலில் இரு அணிகளாக பிரிந்து இக்கொம்பு விளையாட்டு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினர் தங்களது வெற்றியினை மிகவும் ஆரவாரமாக கொண்டாடுவார்கள். வெற்றி பெற்ற அணியினர் அதனை கொண்டாடும் வகையில் பொங்கல் பொங்கி மகிழ்வார்கள்
அதேபோன்று நம்பிக்கை பற்றி வினாவிய போது :
இவ் விளையாட்டினை நிறைவேற்றியதன் பின்னர் மழை வந்து பயிர்கள் நன்கு செழிப்பாக வளர்வதுடன் விளைச்சல் மேலோங்கும்.
கிராமமே செழிப்படையும். நோய்கள் நீங்கும் எனவும் கூறினார்.
பெரும்பாலான ஊர் மக்கள் அனைவரும் இணைந்து தமது பக்தியையும் நம்பிக்கையினையும் வெளிப்படுத்துகின்ற போக்கு இங்கு காணப்படுகிறது.
கொம்புமுறி விளையாட்டு பாரம்பரியத்திற்காகவும் வேண்டுதலுக்காக மாத்திரமே நிகழ்த்தப்படாது. மக்களின் ஒற்றுமையையும், பொது மக்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்ற இடமாகவும் மற்றும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் திகழ்கிறது.
இந்த விளையாட்டின் மூலம் பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை கடவுளிடம் நேரடியாக கொண்டு சேர்க்க முடியும் எனவும் நம்பினர். அதனால் இச் சடங்கினை தொடர்ந்தும் நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் நிகழ்த்தி வருகின்றனர்.
ஜனுக்ஷி ஸ்ரீகாந்தன்…
ஊடக கற்கைத்துறை
யாழ்ப்பாண பல்கழைக்கழகம்
The post மட்டக்களப்பின் கொம்பு முறி appeared first on Thinakaran.

