Tamilnadu
oi-Vishnupriya R
மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக த.வெ.க கட்சியைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்கும் போது தங்களது சின்னமான விசிலை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் உள்ள இஸ்லாமியர் பள்ளிவாசலில், தொழுகை முடித்து வெளியே வருவோரிடம் தவெகவினர் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

அப்போது ஐயூஎம்எல் கட்சியை சேர்ந்தவரும் அமைச்சருமான ஷாஜகான் வாக்கு சேகரித்தார்.
த.வெ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிக்க வந்து, பள்ளிவாசல் உள்ளே இருந்து விசில் அடித்தனர். இதனால் அங்கிருந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் “பள்ளிவாசலில் இருந்து விசில் அடிக்காதீர்கள், வாக்கு சேகரிக்க வந்தால் வாக்கு சேகரித்து விட்டு செல்லுங்கள்” என்று சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
த.வெ.க கட்சியினர் பள்ளிகள், கோவில்கள் என பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்கும் போது அவர்களது சின்னமான விசில் அடித்து வாக்கு சேகரிக்கிறார்கள். இது அப்பகுதியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தமிழக சட்டசபை தேர்தமுன்பு மாமல்லபுரத்தில் பேசிய செங்கோட்டையன், ” இங்கு நிர்வாகிகள் எல்லாருமே விசிலை கையில் வைத்துள்ளீர்கள். ஆனால் நாளை காவல் துறை கூட விசிலை அடிக்க முடியாத நிலை உருவாகும். பேருந்தில் நடத்துநர்கள் விசில் அடிக்க மாட்டார்கள்.
நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர் காதிலே சென்று விசிலை அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும்.
பஸ் ஸ்டாண்டில் வயதாக தடுமாறிக் கொண்டிருக்கிற பெரியவர் அருகே திடீரென்று விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். ஆகவே நம்முடைய விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் போடுகிற வாக்கில் தான் வெற்றி கிடைக்கும் என செங்கோட்டையன் காமெடியாக தெரிவித்திருந்தார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தவெக, மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவி வருகிறது.



