பொதுத்தேர்தல் நடைபெற்று பாராளுமன்றமும் கூடி முடிந்துள்ளது. இந்த வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அதாவது மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்றுவதில் புதிய எம்.பிக்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது குறித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தே மக்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் வாக்களித்துள்ளனர். ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கைத் தேசம் சுதந்திரம் அடைந்த பின்னர் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த பாரம்பரிய அரசியல் கட்சிகள் எதுவுமே பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லையென்பதே மக்களின் குறையாக இருந்தது.
இதுவரை காலமும் நாட்டின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் யாவும் மக்களைப் பற்றியோ அல்லது நாட்டின் நலன் குறித்தோ அக்கறை கொள்ளவில்லை. தமது அரசியலை வளர்த்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளன. ஒருசில அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் நாட்டின் சொத்துகளை சூறையாடுவதிலும் அக்கறையாக இருந்துள்ளனர்.
நாட்டை ஆட்சி செய்தவர்களின் அநீதியான செயற்பாடுகள் குறித்து இலங்கை மக்கள் நீண்ட காலமாகவே அதிருப்தியும், வெறுப்பும் கொண்டிருந்தனர். பாரம்பரிய கட்சிகளை ஒதுக்கிவிட்டு நாட்டில் மாற்றமொன்றைக் கொண்டுவர வேண்டுமென்பதே பெரும்பாலான மக்களின் கனவாக இருந்தது. எனவேதான் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்திருந்தனர்.
அதுமாத்திரமன்றி, ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலும் நாட்டின் பெரும்பாலான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்து, 159 பேரை பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்திருந்தனர். மக்கள் தமது நீண்ட கால ஏக்கங்களை இத்தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.
பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் மக்கள் கொண்டிருந்த வெறுப்பின் வெளிப்பாடே இதுவென்று கூற வேண்டும். இலங்கை அரசியலில் மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்துள்ளனரென்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாத்திரமன்றி, சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றுசேர்ந்தே தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை வாக்களித்திருந்தனரென்பது இதன் மூலம் தெளிவாகின்றது. மக்களின் நீண்ட கால ஏக்கங்களைத் தீர்த்து வைப்பதில் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்ைககளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு வாக்களித்த மக்களின் ஆதங்கத்தை அறிந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியமாகின்றது. மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்புகளை மழுங்கடிக்கும் வகையில் நடந்து கொள்ளாமலிருப்பது புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்போரில் அதிகமானவர்கள் அரசியலுக்குப் புதுமுகங்கள் என்பது தெரிந்த விடயம். ஆனால், அரசியலுக்குப் புதிய முகங்கள் என்பதற்காக அவர்கள் அலட்சியமாக இருந்து விட முடியாது. பொதுமக்கள் முன்வைக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது முக்கியம்.
வடபகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த உறுப்பினர் ஒருவர், முதலாவது பாராளுமன்ற அமர்வின் போது தவறான முறையில் நடந்து கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும் அதன் பின்னர் அந்த உறுப்பினர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற சம்பிரதாயங்கள் புதிதென்பதால் அந்த உறுப்பினர் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
பாராளுமன்ற சம்பிரதாயங்கள் விடயத்தில் புதிய உறுப்பினர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு அன்றைய சம்பவமானது நல்லதொரு உதாரணமாகும். பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை, அவர்களுக்கு வாக்களித்த மக்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாடுமே அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்பதை எம்.பிக்கள் மறந்து விடலாகாது.
தங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவரென்ற நம்பிக்ைகயிலேயே மக்கள் தமக்கான பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த உறுப்பினர்கள் மக்களின் எண்ணங்களை உணர்ந்து கொண்டு சமயோசிதமாகவும், ஆளுமையுடனும் நடந்து கொள்வது அவசியம். பாராளுமன்றம் என்பது மக்களின் குரல்கள் ஒலிக்கும் இடமென்பதை எம்.பிக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
The post மக்கள் பிரதிநிதிகளின் மகத்தான பொறுப்பு appeared first on Thinakaran.
