டெல்லியில் வீசி வரும் வரலாறு காணாத வெப்ப அலைக்கு மத்தியில், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் கிடைக்காமல் டெல்லி மக்கள் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறையின் கோரமுகம் இப்படிதான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்கிறது டெல்லியில் பதிவான இந்தக் காட்சிகள். கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் டெல்லியின் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கி உள்ளது.
நாள் ஒன்றுக்கு டெல்லி அரசு மூலம் 2 முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அது தற்போது ஒரு முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பல மணி நேரமாக தண்ணீருக்கு காத்திருக்கும் மக்கள், லாரி வந்ததும் அடித்து பிடித்து தண்ணீரை பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோடைக் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க டெல்லி அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து அமைச்சர் அதிஷியின் இல்லத்திற்கு முன்பாக பாஜக பெண் நிர்வாகிகள் காலி குடத்துடன் போராட்டம் நடத்தினர்.
அதே சமயம், யமுனை நதியில் இருந்து டெல்லிக்கு தேவையான தண்ணீரை ஹரியானா அரசு திறக்காததே பஞ்சத்துக்கு முக்கிய காரணமாக அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டி உள்ளார். வெப்ப அலை காரணமாக டெல்லி அவரச நிலையை எதிர் கொண்டுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
முன்னதாக வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு ஆலையை டெல்லி அமைச்சர் அதிஷி ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து, டெல்லி அமைச்சர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ் தலைமையில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் உள்பட அனைத்து உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 7 ரயில்கள்.. எங்கு தெரியுமா?
இதையடுத்து, தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க குடிநீர் வாரியத்துக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர்த்து, கட்டுமான பணிகள், காரை பழுது பார்க்கவும், கழுவவும் குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கண்காணிக்க 200 குழுக்களை டெல்லி அரசு அமைத்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
