• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வருமா? – News21 Tamil

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வருமா? – News21 Tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜே.ஏ.ஜோர்ஜ்

“அரசியல் என்பது எதிர்காலத்தை வடிவமைப்பதை விட, எதிர்காலத் தேர்தல்களை நினைப்பதாக மாறிவிட்டது.” – வின்ஸ்டன் சர்ச்சில்

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் என கடந்த ஒரு வருடத்துக்குள் மூன்று  தேர்தல்களை இலங்கை கடந்து விட்டது. அடுத்தடுத்து நடக்கக்கூடிய தேர்தல்கள், மக்களை சலிப்படைய செய்யக்கூடியவை என்பதை அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றது.

கடந்த ஒன்பது மாதங்களில் அடுத்தடுத்து தேர்தல்களை சந்தித்ததால் வாக்காளர்களுக்கு சோர்வு ஏற்பட்டிருந்தது. பெரும்பாலான இலங்கையர்கள், குறிப்பாக இளையவர்கள், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இருப்பினும், மூன்றாவது தேர்தலுக்கான ஆர்வம் குறைவாகவே இருந்தது.

“வயது முதிர்ந்த பலர் மிகவும் நேர்த்தியாக, வாக்களிப்பதை கடமையாக எண்ணி வாக்களித்தனர். இளையவர்கள் ஏக்கத்துடனும், குழப்பத்துடனும்  வாக்களித்தனர். நிறைய வாக்குகள் போடப்பட்டிருக்கவில்லை. ஆட்சியாளர்களை ஆட்சிக் கதிரையில் ஏற்ற வாக்களிக்கும் முகங்களை வாக்களிக்கும் நாளன்று பார்த்தால், அவர்கள் எவ்வளவு எதிர்பார்ப்புக்களை சுமந்து வருகின்றார்கள் என்பது விளங்கும்” என்கிறார் தர்ஷிக்கா துஷ்யந்தன்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் கடமையில் ஈடுபட்ட தர்ஷிக்கா, “மாற்றம் நம்மில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஆட்சிபீடம் ஏறுபவர்களிடம் கேள்வி கேட்க வாக்களித்தவர்கள் என்ற ரீதியில் மக்களுக்கு உரிமை உண்டு. ஊரை அபிவிருத்தி  செய்வதுதான் அவர்களது முதல் பொறுப்பு என்பதை அவர்களை உணரச்செய்ய வேண்டும். ஊருக்கு என்ன தேவை என்பதை பட்டியலிட்டு, அவர்களது கைகளில் மக்கள் கொடுக்க வேண்டும்” என்கிறார்.

மே 06ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் 49 கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 75,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், வாக்குப்பதிவு 50-60 சதவீதத்திற்கு இடையில் தான் இருந்தது. இது 2018 இல் பதிவான 80 சதவீதத்திலிருந்து கணிசமான அளவு சரிவாகும். அத்துடன், உள்ளூராட்சித் தேர்தல் வார நாளில் நடத்தப்பட்டதால் பணிபுரியும் வாக்காளர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி வாக்களிக்காமல் இருந்ததையே காணமுடிந்தது.

உள்ளூராட்சி மன்றங்கள் என்பது உள்ளூர் மக்களின் அன்றாடத் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணும் முக்கியமான அரசியல்-சமூக அமைப்புகளாகும். ஆனால், வயது வித்தியாசம் மற்றும் சமூக மாற்றங்களால் வெவ்வேறு தலைமுறைகள் இவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் 9ஆவது பிரிவின் 4.1, 4.2, 4.3 ஆகிய உறுப்புரைகள் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம் வழங்கப்படுகின்றன. 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் உள்ளூராட்சி செயற்பாடுகள் மாகாண சபையின் கீழ் ஒப்படைக்கப்பட்டன. எவ்வாறாயினும், உள்ளூராட்சியுடன் தொடர்புடைய கட்டமைப்புகளையும் தேசிய கொள்கைகளையும் தயாரிக்கும் அதிகாரம் மத்திய அரசின் கீழ் வைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், மாநகர சபை கட்டளைச் சட்டம் (1947), நகர சபை கட்டளைச் சட்டம் (1939), பிரதேச சபை கட்டளைச் சட்டம் (1987) என்ற 3 சட்ட தயாரிப்புகள் மூலம் உளளூராட்சி நிறுவன கட்டமைப்பு நிர்வகிக்கப்படுகின்றது.

இலங்கையில் 29 மாநகரசபைகள், 36 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் என 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளதுடன், இம்முறை எல்பிட்டிய  பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகரசபை ஆகியவற்றை தவிர்த்து 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

நாட்டின் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் என்பன மக்கள் மத்தியில் சென்றடைவதற்கான முக்கிய அரசியல் நிறுவனங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்த வரை மூத்த பிரஜைகள், உள்ளூராட்சி மன்றங்களை “அரசாங்கத்தின் நேரடி பிரதிநிதிகள்” என்று கருதுகின்றனர். அவர்களின் காலத்தில், கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், வீதிகள், கிணறுகள், தெரு விளக்குகள் போன்ற அடிப்படை விடயங்களை செய்துகொடுப்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவே இவர்கள் கூறுகின்றனர். அத்துடன், பெரும்பாலானவர்கள், உள்ளூராட்சி மன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்பதை இது குறித்து மூத்த பிரஜைகள் பலருடன் பேசியதில் அறிந்துகொள்ள முடிந்தது.

மக்களின் தேவைகளை இனங்காண்பதுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கென உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி மனறங்கள், தற்காலத்தில் மக்களுக்கு அதிக சேவைகளை வழங்கக் கூடிய பொறுப்பினை கொண்டுள்ளன. தனிப்பட்ட பிரஜை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்வு, நலன்புரி சேவைகள் உள்ளிட்ட விடயங்களை நிறைவேற்றுவதில் அளப்பரிய பங்கு உள்ளூராட்சி மனறங்களுக்கே இருக்கின்றது. 

தனது கிராமத்தில் வீதிகள், மற்றும் வடிகால் அமைப்பு, சிறுவர் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்டவற்றை உள்ளூராட்சி மன்றங்கள் நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் இம்முறை தேர்தலில் வாக்களித்தாக கூறுகின்றார் திருகோணமலை புறநகர் பகுதியை சேர்ந்த கார்திகா கமல்ராஜ்.  சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து தேர்தல்களிலும் தான் முன்னின்று வாக்களித்து வருவதாக அவர் கூறுகின்றார். சுமார் 3 வருடங்களாக உள்ளூராட்சி மன்றங்களில் தமது பிரதிநிதிகள் செயற்படாத நிலையில், பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் புதிதாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நூலகங்கள் உள்ளிட்ட அறிவுசார் விடயங்களை அமைத்து அங்குள்ள சிறார்களின் சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்கள் முன்வரவேண்டும் என்பதே கார்திகா கமல்ராஜின் எதிர்பார்ப்பாகும்.

“மனிதன் இயற்கையிலேயே ஓர் அரசியல் விலங்கு” என கிரேக்க தத்துவஞானியான, அரசறிவியலின் தந்தை என அறியப்படும் அரிஸ்டாட்டிலே கூறியிருக்கின்றார். அதன்படி, எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினுடைய பிரதான நோக்கமாக இருப்பது மக்களுக்கு தேவையான சேவை வழங்குவதாகும். இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளவதில் மக்கள் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக உள்ளதுடன், பொதுச்சேவைகளை வழங்கும் நிறுவங்களில் ஒன்றாக உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன.

இலங்கையை பொறுத்தவரையில் சனத்தொகை பெருக்கத்துக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் பாரிய நகரங்கள் மாநகர சபைகளாகவும், சிறிய நகரங்கள் நகர சபைகளாகவும் கிராம பகுதிகள் பிரதேச சபைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து துரிதமான முறையில் சேவைகளை வழங்கவேண்டிய பொறுப்பு இந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கே உள்ள நிலையில், அதனை சரியாக உணர்ந்து செயற்படக்கூடிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவேண்டியது வாக்காளர்களாகிய மக்கள் பொறுப்பாகும். அதனால் தான் ஏனைய தேர்தல்களை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. 

ஆனால், இலங்கையை பொருத்த வரையில் ஏனைய தேர்தல்களை விட குட்டித் தேர்தல் என்று அழைக்கப்படுகின்ற உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் ஒப்பிட்டளவில் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. 

கொவிட் பெருந்தொற்று அதனை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் “அரகலய” போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை, உறுதியற்ற தன்மை காரணமாக 2022ஆம் ஆண்டில் நடக்கவேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து, முந்தைய பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த மார்ச் 2023 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூர் அரசாங்கங்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 2024 இல், உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையின்றி தாமதப்படுத்துவது வாக்காளர்களின் உரிமைகளை மீறுவதாக இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், விரைவில் தேர்தல்களை நடத்த இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டது.

இதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70,000 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், சுமார் 10,000 வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவிக்கின்றார்.

நாட்டில் நடைபெற்ற கடந்தகால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆர்வம் குறைவாக காணப்பட்டதுடன், பிரசாரங்களும் மந்தகதியிலேயே இடம்பெற்றதாக அவர் கூறுகின்றார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மந்தமான நிலையில் காணப்பட்டமைக்கு பெருமளவான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையும் ஒரு காரணம் என தெரிவித்த அவர், இவை தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை வேட்பாளர்கள் எதிர்கொண்டதால் பிரசாரங்கள் மந்த கதியிலேயே இடம்பெற்றதாக சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான தமது எதிர்பார்ப்புகள் இதுவரை காலமும் மிகக் குறைந்த அளவிலேயே நிறைவேறியுள்ளதாகக் கூறும் ச.ஹரிஹரன், திருகோணமலை உப்புவெளியை சேர்ந்த துடிப்பான இளைஞன் ஆவார்.  கிராமிய மட்ட அரசியலில் நிச்சயம் மாற்றம் வேண்டும் என்று கூறும் அவர், மக்கள் பிரதிநிதிகளற்ற சபையானது மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில்லை என்பதால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவசியம் என்கிறார். 

இதேவேளை, இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகமாக இருக்கும் அரச நிறுவனங்களில் உள்ளூராட்சி அதிகார சபைகள் நான்காவது இடத்தில் உள்ளமை இலங்கையின் ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டு திட்டம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான புலனாய்வுப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளமை இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

மே 15 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது மாகாண ஆளுநர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார்.

கடந்த வருடத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இந்த வருடம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிதியை முறையாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றங்களை அதிகாரத்தின் மையமாக பார்க்கின்ற இன்றைய இளம் தலைமுறையினர், அரசியல் செல்வாக்கின் களமாகவும் அதனை குறிப்பிடுகின்றனர்.  பெரும்பாலும் உள்ளூராட்சி மன்றங்களின் செயல்திறன், ஊழல் மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடு போன்றவற்றை விமர்சிக்கின்றனர். இருப்பினும், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் உள்ளூராட்சி மன்றங்கள் மேலும் பங்காற்ற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகவே மக்களுக்கு நெருக்கமான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், அபிவிருத்தி திட்டத்தில் நிதி கையாடல்கள் இடம்பெறுவதாகவே பலரும் குற்றச்சாட்டி வருவதுடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு ஊழல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தும் வகையிலே உள்ளன.

இலங்கையில் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த மோசடியும், ஊழலுமே நாட்டின இன்றயை நிலைக்கு காரணமா என தெரிவித்து அரகலய என்ற போராட்டத்தின் ஊடாக கொதித்தெழுந்த இளைய தலைமுறையினர், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இலஞ்சம், ஊழல், முறைகேடுகள் அற்ற ஒரு நாட்டை, அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர். அதன் காரணமாகவே இன்று பழம்பெரும் அரசியல்வாதிகள், முன்னாள் அரசியல்வாதிகளாக மாறியும் உள்ளனர். அதனை போலவே பாராளுமன்றமும் கறைபடியா கரங்களால் நிரப்பப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகின்றது.

“வரலாற்றில் முன்னேறிய நாகரீகமும், கலாசாரமும் நிறைந்திருந்த இலங்கை இன்றைய நிலையை அடைந்தமைக்கான காரணங்களைச் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அந்த காரணங்களில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு பிராதான பங்குண்டு. சுதந்திரத்திற்குப் பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழலும் இலங்கைச் சமூகத்தில் மிகவும் பரவலாகி, சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதப்படும் அளவிற்கு சர்வ சாதாரணமாகி விட்டது” என்கிறார் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க.

மேலும், நேர்மைத்திறன், இலஞ்சம் மற்றும் ஊழலிற்கு எதிராக செயற்படல், வெளிப்படைத்தன்மை போன்ற விழுமியங்கள் ஒரு நபரின் சிறு பராயத்திலிருந்தே உருவாகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சந்ததியை உருவாக்குவது இலங்கையின் பொருளாதாரத்தில் ஊழலை துடைத்தழிக்கும் என உறுதியாக நம்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் பல புதிய முகங்கள், இளைஞர், யுவதிகள் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ள நிலையில், நாட்டு மக்களின் எதிர்பார்ப்ரபை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டும். அதிகாரம் கிடைக்கும் வரை மாற்றம் பற்றி பேசிவிட்டு அதிகாரம் கிடைத்ததும் அதனை செய்யாது விட்டால், மாற்றத்துக்காக நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களும், நாட்டுக்கும் செய்யும் அநீதியாகவே இருக்கும்.

“அரசியல் என்பது சமூக மாற்றத்தின் கருவி; அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அது சமூகத்தை அழிக்கும் ஆயுதமாக மாறும்” என டாக்டர் அம்பேத்கர் கூறியதை இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தக் கட்டுரை தமிழ் மிரர் E-paperஇல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையாகும். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

என் மனசாட்சி சுத்தமாக இருப்பதுதான் மிக முக்கியம் – Malaysiakini

Next Post

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை! ஒரே ஆண்டில் 15-ஆவது மரணம்

Next Post
கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை! ஒரே ஆண்டில் 15-ஆவது மரணம்

கோட்டாவில் மற்றுமொரு நீட் மாணவி தற்கொலை! ஒரே ஆண்டில் 15-ஆவது மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin