Last Updated:
2047 ஆம் ஆண்டில், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை இந்தியா முழுமையாக அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான திட்டங்களுடன் பட்ஜெட் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை, கடவுள் லட்சுமி தொடர்ந்து ஆசிர்வதிக்கட்டும் எனக் கூறினார். தனது 3 ஆவது ஆட்சிக்காலத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2047 ஆம் ஆண்டில், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை இந்தியா முழுமையாக அடையும் என்றும், மக்களுக்கு புதிய சக்தியை அளிக்கும் பட்ஜெட் இது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து வகையான வளர்ச்சிகளிலும் தனது 3 ஆவது ஆட்சிக் காலத்தில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். புத்தாக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீடு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானவை என்று கூறிய பிரதமர், அதை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக, வெளிநாட்டு சதி எதுவும் நடைபெறாமல், நாடாளுமன்றம் கூடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பட்ஜெட்டிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று சமர்ப்பித்தார்.
January 31, 2025 4:16 PM IST


