Last Updated:
நவம்பர் 1 முதல் டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட BS-VI தரத்திற்கு கீழ் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்படும்
டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பட்டாசுகளை முழுமையாகத் தடை செய்யவும் முடியாது, அதேவேளையில் 24 மணி நேரமும் வெடிக்க அனுமதிக்கவும் முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு இடையே ஒரு ‘நடுநிலையான வழியை’ கண்டறிய வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
பட்டாசுகளுக்கு முற்றிலும் தடை விதித்தால் அது மக்களின் மத மற்றும் கலாச்சார உணர்வுகளைப் பாதிக்கும். அதேநேரத்தில், நாள் முழுவதும் வெடிக்க அனுமதித்தால் முதியோர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பட்டாசுகளை வெடிப்பதற்கான குறிப்பிட்ட நேரத்தையும், அனுமதிக்கப்பட வேண்டிய பாதுகாப்பான பட்டாசு வகைகளையும் வரையறுப்பதன் மூலம் மட்டுமே இதற்கு சரியான தீர்வு காண முடியும்.
பட்டாசுகளில் பேரியம் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும், அவற்றின் சத்த அளவையும் கூட்டாகப் பரிசோதித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய தசாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குளிர் காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள டெல்லி அரசு தனது சிறப்பு குளிர்கால செயல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 1 முதல் ANPR கேமரா பொருத்தப்பட்ட 500 பெட்ரோல் பங்குகளில் ‘No PUCC, No Fuel’ பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUCC) இல்லாத வாகனங்களுக்கும், ஆயுட்காலம் முடிந்த பழைய வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படாது.
நவம்பர் 1 முதல் டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட BS-VI தரத்திற்கு கீழ் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் (மின்சார மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு விலக்கு உண்டு).
தூசியை உண்டாக்கும் கட்டுமான உடைப்பு மற்றும் வெளிப்புற சிவில் பணிகள் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை தடை செய்யப்படும். மேலும், டிசம்பர் 10 முதல் ஜனவரி 20 வரை அனைத்து விதமான கட்டுமானப் பணிகளுக்கும் முழுமையான தடை அமலில் இருக்கும்.
போக்குவரத்தைக் குறைக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் நவம்பர் 1 முதல் 50 சதவீத ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை (Work From Home) அமல்படுத்தப்படும்.
மெட்ரோ நிலையங்களைத் தவிர மற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பார்க்கிங் மையங்களிலும் கட்டணம் இருமடங்காக்கப்படும். மின்சார பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


