17வது மக்களவையில், மொத்தம் 78 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதால் எண்ணிக்கை 77 ஆக ஆனது. தேசியக் கட்சிகளைச் சேர்ந்த 397 நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களில் 303 பேர் பாஜகவினர், 52 பேர் காங்கிரஸ், 22 பேர் திரிணமூல் காங்கிரஸ், 23 பேர் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 89.6 கோடி. இது தற்போது 96.8 கோடியாக அதிகரித்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 48.5 கோடியாகவும், தற்போது 49.7 கோடியாகவும் அதிகரித்துள்ளது. அதே வேளையில், பெண் வாக்காளர் எண்ணிக்கை கடந்த 2019ல் 43.1 கோடியாக இருந்து தற்போது 47.1 கோடியாக அதிகரித்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் மொத்த வாக்காளர்களிலும் சரி, வாக்களித்த வாக்காளர்களின் விவரத்திலும் சரி பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த நிலையே நீடிக்கிறது. அதாவது, தமிழகத்தில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 50.5 சதவீதம் பேர் பெண்கள். தேர்தலில் 50.4 சதவீதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். மொத்தம் பதிவான வாக்கு சதவீதம் 72.29 சதவீதம் என்கிறது புள்ளிவிவரம்.
இதுவே ஒவ்வொரு மாநிலத்திலும் நீடிக்கிறது. ஒரு சில மாநிலங்களில் வேண்டுமானால் இந்த நிலை மாறலாம்.
இதுபோல, நாடு முழுவதும் கடந்த ஐந்து மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் புள்ளிவிவரத்தின்படி, தொடர்ந்து வாக்களிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதாவது, 1999ஆம் ஆண்டு பதிவான மொத்த வாக்குகள் 59.99 சதவீதமாகும். இதில் வாக்களித்த ஆண்கள் 63.97 சதவீதம், பெண்கள் 55.64 சதவீதம்.
2004ஆம் ஆண்டு பதிவான மொத்த வாக்குகள் 58.07 சதவீதம். இதில் வாக்களித்த ஆண்கள் 61.66 சதவீதம், பெண்கள் 53.30 சதவீதம்.
2009ஆம் ஆண்டு பதிவான மொத்த வாக்குகள் 60.24 சதவீதம். இதில் வாக்களித்த ஆண்கள் 60.24 சதவீதம், பெண்கள் 55.82 சதவீதம்.
2014ஆம் ஆண்டு பதிவான மொத்த வாக்குகள் 66.44 சதவீதம். இதில் வாக்களித்த ஆண்கள் 67 சதவீதம், பெண்கள் 65.54 சதவீதம்.
2019ஆம் ஆண்டு பதிவான மொத்த வாக்குகள் 67.01 சதவீதம். இதில் வாக்களித்த ஆண்கள் 67.01 சதவீதம், பெண்கள் 67.18 சதவீதம் என்கிறது.
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பது விரைவில் தெரிய வரும்.