புதுடெல்லி: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபடதிட்டங்களை வகுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், கடந்த தேர்தலை விட வாடகை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான தேவை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜன் மெஹ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தொலைதூரப் பகுதிகளுக்கு குறுகிய காலத்தில் சென்று அரசியல் தலைவர்கள்பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு தனியார் விமானம், ஹெலிகாப்டர்கள் அத்தியாவசியமான தேவையாக உள்ளது. இதன் மூலம், அவர்கள் அதிக இடங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியும். வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும்.
இதனால், கடந்த தேர்தலை விட வரும் மக்களவை தேர்தலில் தனியார் ஜெட் விமானம், ஹெலிகாப்டர்களுக்கான தேவை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரைஅதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், சார்ட்டர்ட் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான தேவையானது குறைவாகவே இருக்கும்.
அரசியல் கட்சிகளின் பரபரப்பான பிரச்சார திட்டமிடலையடுத்து தேவை அதிகரித்துள்ள சூழ்நிலையில், ஒரு மணி நேரத்துக்கான விமான வாடகை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரை இருக்கும். ஹெலிகாப்டருக்கான ஒரு மணி நேர வாடகை ரூ.1.5 லட்சமாக இருக்கும். இவ்வாறு ராஜன் மெஹ்ரா தெரிவித்தார்.
பிசினஸ் ஏர்கிராப்ட் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் (பிஏஓஏ) நிர்வாக இயக்குநர் கேப்டன் ஆர்.கே. பாலி கூறுகையில், “2023 டிசம்பர் நிலவரப்படி நாட்டில்112 தனியார் விமான, ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், 40-50 சதவீதநிறுவனங்கள் ஒற்றை விமானத் தைக் கொண்டு இயங்கி வருவதாகும். இதுபோன்றவை பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலையான அட்டவணையைக் கொண்டிருக்காத நிறுவனங்களாகும். தேவையை அடிப்படையாக கொண்டு மட்டுமே இதன் செயல்பாடு அமையும்.
இதுபோன்ற நிறுவனங்களிடம் ஹெலிகாப்டர்கள் உட்பட சுமார் 450 விமானங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.