Last Updated:
2024-2025 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8% இருக்கும் என நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மும்பை சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்தது.
அடுத்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் 2024 – 2025 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு நடப்பு நிதியாண்டில் பொருளாதார செயல்திறனை அடிப்படியாக கொண்டு பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது .
அதில் 2025 – 2026 நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் 5 புள்ளி 2 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி ஆண்டின் முதல் பாதியில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பல்வேறு வளர்ச்சி முயற்சிகள் இருந்த போதிலும் நாட்டின் விவசாயத் துறை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
2017 முதல் 2023 நிதி ஆண்டு வரை வேளாண் துறை வளர்ச்சி ஆண்டுதோறும் சராசரியாக 5 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்தடுத்து உருவான சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்தித்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கைக்கு மக்களைவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 740 புள்ளிகள் வரை உயர்ந்தது. அனைத்துப் பங்குகளின் விலைகளும் அதிகரித்த நிலையில், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 258 புள்ளிகள் அதிகரித்தது.
January 31, 2025 10:28 PM IST


