Last Updated:
சாலை விதிமுறைகளை மீறினால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ராஞ்சி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவர் ஸ்பீடு சர்ச்சையில் சிக்கியதால் ஓலை அனுப்பப்பட்டுள்ளது. நடந்தது என்ன?
கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக கார் மற்றும் பைக் மீது அதிக காதல் கொண்ட மகேந்திர சிங் தோனிக்கு, அதுவே தற்போது பிரச்சனையாக வந்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் கூல் கேப்டனாக அறியப்பட்டவர் சாலையில் கண்முன் தெரியாமல் கார் ஓட்டியதால் போலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். தோனிக்கு ஸ்பீட் பிரேக் போட்டதன் பின்னணி என்ன?
சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிக் கேப்டனாக உலாவந்த தோனி தலைமையில், இந்திய அணி ஒருநாள் மற்றும் டி-20 உலகக் கோப்பையை வென்று சாதித்துள்ளது. இதேபோன்று, ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி அண்ட் கோ 5 முறை மகுடம் சூடி, அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் மும்பையுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோதும், 44 வயதான தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துள்ள தோனி, சக வீரர்களுடன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை வருவதற்கு முன்பு கடந்த ஒன்றாம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராஞ்சியில் காரில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே காங்கே வெளிவட்டச் சாலையில் பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் அருகே சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். இது அங்கு பொருத்தியிருந்த தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை கண்காணிக்க இதுபோன்ற கேமரா நகரின் முக்கியப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் தோனியின் கார் ரிங் ரோட்டில் மின்னல் வேகத்தில் பறந்தது பதிவாகியுள்ளது. இதன் மூலம் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதற்கான இ-சலான் டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்டுள்ளது. சாலை விதிமுறையை மீறினால் அது யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், ராஞ்சியில் குடியிருப்பு நிலத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, மாநில வீட்டுவசதி வாரியம் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியது. வெளிவட்டச் சாலை அருகே உள்ள தற்போதைய வீட்டிற்கு வருவதற்கு முன்பு ஹர்மு சாலையில் உள்ள பகுதியில் தோனி வசித்தார். அப்போது குடியிருப்புக்காக வழங்கப்பட்ட அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் சட்டச் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டது.
சாலை விதிமுறைகளை மீறினால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


