Last Updated:
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைவதற்கு பிரார்த்திப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த கும்பமேளா நடைபெறும்.
இந்நிலையில் 17 வது நாளான இன்று மௌனி அமாவாசை புனித திருநாளை முன்னிட்டு அமிர்த ஸ்நானம் எடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்தனர். அரசு அளித்த தகவலின் படி இன்று காலை 10 மணிக்கு முன்னதாகவே 3 கோடிக்கும் அதிகமான திரிவேணி சங்கமத்தில் குவிந்து புனித நீராடினர்.
திடீரென நெரிசல் ஏற்பட்டதில் 30க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதிகாலையிலேயே கூட்டம் அதிக எண்ணிக்கையில் குவிந்தது நெரிசலுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கும்பமேளாவை முன்னிட்டு பிரக்யாராஜில் மட்டும் 10 கோடி பக்தர்கள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசலை தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு துரிதமாக நடவடிக்கையை எடுத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைவதற்கு பிரார்த்திப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை உத்தரப்பிரதேச அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
January 29, 2025 1:03 PM IST


