Last Updated:
மம்தா பானர்ஜி மகா கும்பமேளாவை ‘மரண கும்பமேளா’ என விமர்சித்தார். இதற்கு பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜி முழு இந்து சமூகத்தையும் தாக்குகிறார் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் கடந்த தை அமாவாசை அன்று புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்போது 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை மேற்கு வங்க முதல்வர் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநில பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மகா கும்பமேளா மரண கும்பமேளாவாக மாறிவிட்டது. நான் மகா கும்பமேளாவையும், புனித கங்கா மாதாவையும் மதிக்கிறேன். ஆனால், அங்கு சரியான திட்டமிடல் இல்லை. வி.ஐ.பி.க்களுக்கும், பணக்காரர்களுக்கும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கூடாரங்கள் அங்கு அமைக்கப்படுகின்றன. ஆனால், ஏழைகளுக்கு கும்பமேளாவில் எந்த ஏற்பாடும் இல்லை. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை.
மேற்கு வங்கம் மாநிலம், கங்கா சாகர் மேளாவில் விஐபி கலாச்சாரத்தை அனுமதிக்காது. நான் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மதம் என்பது விற்பனைக்கானது அல்ல. நீங்கள் (பாஜக) மதத்தை விற்று நாட்டைப் பிளவுபடுத்துகிறீர்கள்.
இதையும் படியுங்கள் : எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பாமக தலைவர்! பின்னணி என்ன?
கும்பமேளாவில் அந்த சம்பவம் நடந்த பிறகு எத்தனை கமிஷன்கள் அங்கு அனுப்பட்டன?. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேற்குவங்கத்தினரின் உடல்களை உடற்கூராய்வு செய்யாமல் மாநிலத்திற்கு அனுப்பினர். மேலும், மாரடைப்பு காரணமாக இறந்ததாகக் கூறி அவர்களுக்கான நிவாரணமும் மறுக்கப்பட்டார்கள். மேற்குவங்க அரசு இங்கு அந்த உடல்களை உடற்கூராய்வு செய்து மரணச் சான்றிதழ் வழங்கியுள்ளது” என்று பேசினார்.
இவரின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்குவங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி, “மம்தா பானர்ஜி முழு இந்து சமூகத்தையும் தாக்குகிறார். இந்து சமூகத்தினர், துறவி சமூகத்தினர் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்றத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இது மகா கும்பமேளா அல்ல மரணக் கும்பமேளா என்று கூறினார்.
இந்துக்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள். நீங்கள் ஒரு உண்மையான இந்துவாக இருந்தால், அரசியலுக்கு அப்பாற்பட்டு, மம்தா பானர்ஜியின் இந்த வார்த்தைகளைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்தின் வெளியே மம்தா பானர்ஜியின் கருத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
February 18, 2025 5:48 PM IST


