Last Updated:
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததன் மூலம், பெண்களின் உரிமைகளை திரிணாமூல் காங்கிரஸ் பறித்ததாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டிய நிலையில், அவர் நடிப்பதாக மம்தா பானர்ஜி பதிலடி தந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை திரிணாமுல் காங்கிரஸும் காங்கிரஸும் இணைந்து தோற்கடித்ததாக மேற்குவங்க பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேற்கு வங்கத்தில் நிலவும் காட்டாட்சியை பெண்கள் எதிர்க்கத் தொடங்கிவிட்டதால், பெண்கள் அதிக அளவில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்களாக வருவதை மம்தா அரசு விரும்பவில்லை என்று சாடினார்.
இதற்கு பதிலளித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமரின் குற்றச்சாட்டுகள் கோழைத்தனமானது என்றும், பாசாங்குத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார்.
தாங்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பதில் முன்னணியில் இருப்பதாகவும் மம்தா கூறினார். தங்களது கட்சியில் 37.9% பெண் எம்.பி-க்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் இடஒதுக்கீட்டை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை மூலம் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக இடங்களைப் பெற்றுத் தர மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 2023-லேயே மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு ஏன் இந்த அவசரம்? என்றும் மம்தா கேள்வி எழுப்பினார்.
Apr 19, 2026 10:19 PM IST

