கோலாலம்பூர்:
அனைத்துலக நிலையில் மகளிருக்கு எதிரான வன்முறைகள் தீர்க்கப்படும் தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
மகளிருக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் நிறுத்துவதில் சமூகத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த நிகழ்வு முக்கியப் பங்கினை வகிக்கிறது என்று மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.


நமது நாட்டில் மகளிருக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அரச மலேசிய காவல்துறையின் புள்ளிவிவர அறிக்கையின்படி கடந்த 2024ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம் 1,899 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையில் இவ்வாறான மொத்தம் 1,273 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தம் 7,116 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையில் மொத்தம் 5,041 சம்பவங்கள் புகார் செய்யப்பட்டிருக்கின்றன என்றார் அவர்.


மகளிர் சார்ந்த வன்முறைகளால் தனிப்பட்டவர்கள், குடும்பத்தினர், சமூகத்தினர், நாடு ஆகிய பலதரப்பும் சம்பந்தப்பட்டிருப்பதால் மகளிருக்கு எதிரான வன்முறைகளைக் களைவதில் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சு முழுமையான கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
மகளிர் வன்முறைப் பிரச்சினைகளைக் கையாளுவதில் ஒருமித்த விழிப்புணர்வு குறிப்பாக ஆண்கள் தரப்பில் மிக அவசியமாகிறது.


மகளிருக்கு எதிரான வன்முறைகளைத் தீர்க்கும் தினத்தை அனுசரிப்பது தவிர்த்து மகளிர் ஆற்றலை ஊக்குவிப்பதற்கான அமைச்சின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நான்கு நிலை திட்டங்களும் அமல்படுத்தப்படுகின்றன. மகளிரும் பொருளாதாரமும் மகளிரும் தலைமைத்துவமும் மகளிரும் வளப்பமும் மகளிரும் பாதுகாப்பும் என்ற நான்கு நிலைகளாகும் அவை. மகளிர் மேம்பாட்டு இலாகாவின் வாயிலாகவும் அமைச்சு பல்வேறு இயக்கங்களை இதன் தொடர்பில் நடத்துகிறது.
பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்ட ஆலோசனைத் திட்டங்கள், மகளிருக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரும் இயக்கங்களும் இதில் அடங்கும்.
சட்ட ஆலோசனைப்படியிலான திட்டம், 2022ஆம் ஆண்டு பாலியல் தொல்லைக்கு எதிரான சட்ட அமலாக்கம் அமைந்திருக்கிறது. சட்டம் 840 என்றறியப்படும் அந்தச் சட்டம் கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வந்தது.


இதுவரையில் 11 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. அதில் ஐந்து பூஜ்ஜிய நிலை வன்முறைத் திட்டமாகும். மேலும் 6 அரசாங்க தனியார் துறையினர் இணை ஏற்பாட்டில் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டவையாகும். வன்முறை சார்ந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக குடும்ப வன்முறை செயற்குழுவின் கீழ் சட்ட ஆற்றல் மேம்பாட்டு பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆலோசனைச் சேவைகளை வழங்குவது, மாத்தாஹரி திட்டம், ஸ்குவாட் வாஜா பிரிவை ஏற்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும் என்று நான்சி தெரிவித்தார்.
தங்களுக்கு நேரும் அநியாயம் பற்றிய விழிப்புணர்வை மகளிருக்கு ஏற்படுத்த ஐரிஸ் திட்டம் எனப்படும் சட்டப்பூர்வ எழுத்தாற்றலும் மகளிர் உரிமையும் திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


கடந்த 2021ஆம் ஆண்டு ஸ்குவாட் வாஜா எனப்படும் மகளிர் படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் மொத்தம் 339,514 பேர் நாடு முழுவதும் இந்த அமைப்பில் இணைந்திருக்கின்றனர். அதில் 263,430 பேர் பெண்கள், 76,084 பேர் ஆண்கள்.
ஆள்கடத்தல் சட்டம் 2007இன் கீழ் பாதிக்கப்பட்ட மகளிருக்கு மகளிர் பாதுகாப்பு இல்லமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்காக மொத்தம் ஐந்து வீடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. குடும்ப
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலமளிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த வீடுகள் கோத்தா கினாபாலு வரையிலும் விரிவாக்கம் கண்டுள்ளன.


அகுவனிதா@கேஆர்டி என்ற திட்டமும் மகளிருக்கான சட்ட ஆலோசனைகளுக்கான கருத்தரங்கம், சொற்பொழிவு, கேசாட் மனநல விவகாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனப்போராட்டங்களையும் பாதிப்புகளையும் கையாளக்கூடிய வகையில் இவை அமைந்திருக்கின்றன.
மகளிருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் மலேசிய மகளிர் கொண்டுள்ள விழிப்புணர்வு பற்றி கூறுகையில் அந்த நிலை இன்னமும் வலுவாக வேண்டும் என்று நான்சி கூறினார். கொடுமை இழைக்கப்பட்டால் குறிப்பாக மிக நெருக்கமானவர்களால் கொடுமைக்குள்ளானால் அதுபற்றி யாரிடம் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்த அறியாமை பாதிக்கப்படும் பெண்களிடம் பரவலாகவே அதிகமாக உள்ளது.


கொடுமைக்குள்ளாகும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து அமைதியாகவே இருந்துவிடுகின்றனர். தங்கள் இணை குறித்த அச்சமும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலையும் சார்ந்திருக்க இடம் இல்லாமல் போய்விடும் என்ற பயம் அல்லது அவமான உணர்வுகளின் காரணமாகவே அவர்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியில் சொல்லாமல் அமைதி காத்துவிடுகின்றனர்.
ஒரு சம்பவம் நடந்த பின்னர் அதனை மறக்கச் செய்யும் விதமாக தங்கள் இணையர் கூறும் சமாதானங்களை நம்பியும் அவர்கள் வாளாவிருந்துவிடுகின்றனர். இன்னும் சிலரோ வாழ்க்கையில் இதெல்லாம் கடந்து வர வேண்டிய அனுபவங்கள் என்று சும்மாவே இருந்துவிடுகின்றனர் என்று நான்சி கூறினார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் 15999 என்ற எண்ணில் தாலியான் காசே, 019- 2615999 என்ற வாட்ஸ்அப் எண்கள் அல்லது கைப்பேசியில் தாலியான் காசே செயலியை பதிவேற்றம் செய்து தங்கள் பிரச்சினைகள் குறித்து புகார் செய்யலாம் என்று அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் மஸியா சே யூசோப் தெரிவித்தார்.
இதுபோன்று பெண்கள் தங்கள் பிரச்சினைகளை உள்ளுக்குள் வைத்துப் புழுங்கும் விவகாரங்களைக் கையாள அண்மையில் அவாக் ஓகே தாக் என்ற திட்டமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
வன்முறை வளையத்திற்குள்ளிருந்து பெண்கள் துணிச்சலுடன் வெளி வந்து தங்கள் பாதுகாப்பான வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சைகளைப் பெற தயங்காது முன் வர வேண்டும் என்பதோடு ஆலோசனைச் சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளுக்காகத் தங்கள் பிரச்சினைகளையும் புகார் செய்ய வேண்டும்.


கல்வியின் மூலமும் போதனைகளின் மூலமும் பெண்கள் வலிமைப் பெற்று விளங்கிட வேண்டும். ஆக்கப்பூர்வத் தன்மை கொண்டவர்களாகவும் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்களாகவும் பெண்கள் இருப்பதன் மூலம் அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அறிந்து செயற்பட முடியும். பிரச்சினைக்குரிய பெண்களை அணுகி அவர்களுக்கு உதவ சமுதாயத்தினர் முன்வர வேண்டும். மகளிருக்கு எதிரான அநியாயங்களை நிறுத்துவீர் என்று அவர் குறிப்பிட்டார்.
மகளிருக்கு எதிரான இலக்கவியல் வன்முறைகளை நிறுத்த ஒன்றிணைவோம் என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டுக்கான மகளிர் தினம் வன்முறைகளைத் தீர்க்கும் தின நிகழ்வானது அமைந்திருந்தது.
இதற்கான தேசிய வண்ணமாக ஆரஞ்சு நிறம் அனைத்துலக சமூகத்தினரால் நவம்பர் 25ஆம் தேதி பயன்படுத்தப்பட்டது. ஆரஞ்சு நாடு என்ற இயக்கத்தின் அடிப்படையில் பிரதான கட்டடங்கள் பலவும் ஆரஞ்சு நிற விளக்கொளியால் மின்னி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் துடைத்தொழிக்கப்படுவதற்கான ஒருமித்த உணர்வை பிரதிபலித்தன.




