Last Updated:
மகர சங்கராந்தி பண்டிகையில் டெல்டா மாவட்டங்களில் சேவல் சண்டையில் 500 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர சங்கராந்தி பண்டிகையை ஒட்டி, ஆந்திராவின் டெல்டா மாவட்டங்களில் பாரம்பரிய சேவல் சண்டையில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, பிரகாசம், குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக பிரமாண்டமான அளவில் சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன. ஒரு லட்சம் முதல் 50 லட்ச ரூபாய்க்கான பந்தயங்கள், நிமிடங்களில் பேசி களத்தில் சேவல்கள் இறக்கப்பட்டன. கத்திக்கால் சண்டையில் சில சேவல்கள் ஒரே போட்டியில் அதன் உரிமையாளர்களை லட்சாதிபதி ஆக்கியதால் மைதானத்தில் கொண்டாட்டம் களைகட்டியது.
பந்தயக்காரர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு தேவையான உணவுகள், மதுவகைகளும் தாராளமாக வழங்கப்பட்டன. தங்கள் சேவல்கள் மீதுள்ள நம்பிக்கையில் ரொக்கம் மட்டுமின்றி கார், பைக், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை உரிமையாளர்கள் அள்ளி வீசியதால் சேவல் சண்டை விழா அதகளமாக நடைபெற்றது.


