Last Updated:
இந்தூரை சேர்ந்த கங்கா, தனது 46 வயது மகன் கமலேஷ் வர்மாவுக்கு சிறுநீரகத்தை தானம் செய்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த 72 வயது தாயொருவர், தனது சிறுநீரகத்தை மகனுக்கு தானமளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமலேஷ் வர்மா என்ற தனது 46 வயது மகனுக்காக, இந்த சிறுநீரக தானத்தை செய்துள்ளார் அந்த தாய்.
தகவல்களின்படி, கமலேஷுக்கு தீவிர சிறுநீரக பிரச்னைகள் இருந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளாகவே அவர் அதற்காக சிகிச்சை பெற்றுவந்த போதும், உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் ஒப்புதலுடன் கமலேஷின் தாயார் கங்கா (72) தன் சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இந்தூரிலுள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

சிறுநீரகம்
இதுகுறித்து அம்மருத்துவமனையின் தலைமை சிறுநீரகவியல் மருத்துவர் ரித்தேஷ் ஊடகங்களிடம் பேசிகையில், “சிறுநீரகம் தானமளிப்பவர் வயது முதிர்ந்தவராக இருந்ததால், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சவாலாகவே இருந்தது. இருப்பினும் நல்லபடியாக முடியாது. இதைக் காணும் பிறருக்கும், தங்களின் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்” என்றுள்ளார். தொடர்ந்து தாய் – மகன் இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகனுக்கு தன் சிறுநீரகத்தை கொடுத்த தாய் கங்கா, “தன் குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றுவது ஒரு தாயின் கடமை. என் சிறுநீரகம், என் மகனின் வாழ்க்கையை காப்பாற்றும் எனும்பட்சத்தில், அதைவிட எனக்கு வேறென்ன சந்தோஷம் இருந்துவிடப்போகிறது?” என்று உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.
October 18, 2025 4:56 PM IST