
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், திருச்செங்கோட்டை சேர்ந்த மல்லிகா என்பவரை 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண வரன் பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த மல்லிகா, மிகுந்த கடவுள் நம்பிக்கையுடன், மாதந்தோறும் திருப்பதி உள்ளிட்ட பிரபல கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அதே போன்று, வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற மல்லிகா, இலவச டோக்கன் வாங்குவதற்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க: திருப்பதியில் அமலான புதிய முறை..! கூட்ட நெரிசல் அசம்பாவிதற்கான காரணம் என்ன?
திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன இத்தம்பதிக்கு, வாரிசு இல்லாத நிலையில், விவாகரத்தான முன்னாள் மனைவிகளுக்கு பிறந்த குழந்தைகளும் கொரோனாவில் உயிரிழந்ததாகவும், மாதந்தோறும் திருப்பதிக்கு செல்லும் மல்லிகாவும் தற்போது உயிரிழந்ததாகவும் கிருஷ்ணன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மல்லிகா, மிகுந்த அன்புடன் பழகக்கூடியவர் என அவரது கிராமமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதனிடையே, மேச்சூரை சேர்ந்த சுமார் 15 பேர் திருப்பதி சென்ற நிலையில், கூட்ட நெரிசலில் இருந்து தப்பியவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். மல்லிகாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது கணவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.
மரணமடைந்த சேலத்தை சேர்ந்த மல்லிகாவுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக கீழே விழுந்து மிதிபட்டு இறந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கும் மல்லிகாவின் கணவர் கிருஷ்ணராஜ் மற்றும் உறவினர்கள் ஆகியோர் இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் சொல்கிறது என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நன்றாக இருந்த பெண், உடல்நிலை பாதிப்பு காரணமாக கீழே விழுந்து மிதிபட்டு இறந்து விட்டார் என்பது கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
Tirupati,Chittoor,Andhra Pradesh
January 09, 2025 1:47 PM IST
“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் சொல்கிறது..” – திருப்பதியில் உயிரிழந்த பெண்ணின் கணவர் வாக்குவாதம்

