பினாங்கு, ஜார்ஜ் டவுன் டத்தோ கெராமட் காவல் நிலையத்தில் இன்று காவலரைத் தாக்கி அவரது துப்பாக்கியைப் பறிக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 35 வயதான உள்ளூர்வாசி ஒருவர் மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்திற்குச் சென்றபோது மது போதையில் இருந்ததாக நம்பப்பட்டதாக கோஸ்மோதெரிவித்துள்ளது. சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நாளிதழ் ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டியது.
கைது செய்யப்பட்ட போது சில லேசான காயங்களுக்கு ஆளான சந்தேக நபர், பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியப்படுகிறது. பெரித்தா ஹரியானின் கூற்றுப்படி, நீங்கள் ஏன் காவல் நிலையத்திற்கு வந்தீர்கள் என்று கேட்டபோது, சந்தேக நபர் காவலரை கடுமையாகத் திட்டிவிட்டு வளாகத்திற்குள் நுழைந்திருக்கிறார்.
சந்தேக நபர் பின்னர் காவல்துறை அதிகாரியின் HK MP5 சப்மஷைன் துப்பாக்கியை கைப்பற்ற முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார். போலீசார் நிலைமையை தணிக்க முற்பட்ட போது சந்தேக நபர் தலைக்கவசத்தை கழற்றி தாக்கியுள்ளார். பின்னர் போலீஸ்காரரின் சகாக்கள் நுழைந்து, சந்தேக நபரை வெற்றிகரமாகப் பிடித்தனர். பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்சா அஹ்மட் ஒரு அறிக்கையில், சந்தேகநபருக்கு ஏற்கெனவே நான்கு குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், அவற்றில் இரண்டு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பானவை என்றும் கூறினார்.
குற்றவியல் மிரட்டல் மற்றும் கிரிமினல் சக்தியைப் பயன்படுத்தி ஒரு பொது ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 353 மற்றும் 506 மற்றும் காவல்நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக காவல் சட்டம் 1967 இன் பிரிவு 90 ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

