கோத்தா கினாபாலு,
Beaufort மாவட்டத்தில் போதை மருந்து விற்பனையாளர்கள் மீது சபா போலீசார் நடத்திய சுற்றிவளைப்ப்பு செய்தனர். இதன்போது, தங்களை கைது செய்ய வந்த போலீசாரின் வாகனத்தில் மோத முயற்சித்த அவர்களை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 10 கி.மீ தூரம் துரத்திய பிறகு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அதிகாலை 4.15 மணியளவில் ஜாலான் மெம்பாக்குட் பகுதியில் நடத்தப்பட்ட “ஒப்ஸ் கெம்பூர்” என்ற குற்றவியல் விசாரணை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
“நாங்கள் போலீஸ்!” எனக் கூறி சந்தேகநபர்களை வாகனத்திலிருந்து வெளியே வருமாறு கட்டளையிட்ட போதும், அவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிக் கொண்டு போலீசாரை மோத முயற்சித்தனர். இதனால் போலீசார் தங்கள் பாதுகாப்பிற்காக வாகனத்தின் முன் சக்கரங்களில் துப்பாக்கி சூடு நடத்தினர் என்று Beaufort மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டட் வோங் லியோங் மெங் தெரிவித்தார்.
சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள கம்போங் லுமாட் பகுதியில் அவர்கள் வாகனம் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு வாகனத்தை விட்டு காட்டு பகுதியில் ஓடிய சந்தேகநபர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தப்பித்துவிட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 18 மற்றும் 29 வயதுடையவர்கள். அவர்களிடம் இருந்து 51.28 கிராம் மெதாம் பெத்தமின் (Syabu) பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள், பயன்படுத்திய வாகனம் மற்றும் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சந்தேகநபர்கள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் முன்பு நான்கு போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவராகவும், 18 வயது இளைஞருக்கு எந்த குற்றச்சாட்டு வரலாற்றும் இல்லையென்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு 1952-ம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய சந்தேகநபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதோடு, பொதுமக்கள் அவரை கண்டுபிடிக்க உதவும் தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.