அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை “வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸையும் ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்து, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையானது.
இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரின் மனைவியும் அமெரிக்காவின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா உட்பட பல நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன.
இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தது.

