கோலாலம்பூர்:
காவல்துறை அதிகாரி எனக்கூறி தொலைபேசி வாயிலாக மிரட்டிய மர்ம நபர்களிடம், உணவகம் நடத்தி வரும் 58 வயது பெண்மணி ஒருவர் சுமார் RM364,500 பணத்தை இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், அந்தப் பெண் பணமோசடி (Money Laundering) நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சந்தேக நபரின் மிரட்டலுக்குப் பயந்த அந்தப் பெண், தனது வங்கி ரகசியத் தகவல்கள் மற்றும் வங்கி அனுப்பிய OTP (One-Time Password) எண்களையும் அந்த நபரிடம் பகிர்ந்துள்ளார் என்று, தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டெண்ட் ரோஸ்லான் முகமட் தாலிப் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் வங்கித் தகவல்களைப் பெற்ற மர்ம நபர்கள், அவரது ஆன்லைன் வங்கி கணக்கைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் மூலம், அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே அவரது கணக்கிலிருந்து மொத்தம் RM364,500 பணம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த வழக்கு, ஏமாற்றுதல் தொடர்பான குற்றவியல் சட்டப்பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று, அவர் சொன்னார்.
The post போலி போலீஸ் மிரட்டல்: RM3.5 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த 58 வயது பெண்மணி! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

