அசாம் மாநிலம் பொங்கைகான் பகுதியில் ஜோதிஷா தாஸ் என்ற பெண், உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். பொதுப் பணித்துறையில் பணியாற்றிய இவர், தனது வேலையில் மிகவும் நேர்மையாக இருந்துள்ளார். 30 வயதே ஆன இளம் பொறியாளர் என்பதால் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் துடிப்புடன் செயல்பட்டுள்ளார். இதனால், சக ஊழியர்கள் மட்டும் இன்றி சீனியர் ஆபீசர்களும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதுதுறித்து பலமுறை தனது பெற்றோரிடம் கூறி மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தனது வாடகை வீட்டில் தங்கியிருந்த ஜோதிஷா, திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் பொறியாளர் தனது கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், தனது இந்த முடிவுக்கு இரு மூத்த அதிகாரிகள் தான் காரணம் எனக் கூறி, அவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் கட்டுமான பணி முழுமையாக முடிவடையாத நிலையில், அது முடிவுற்றதாக கூறி ஒப்புதல் அளிக்க அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அது தொடர்பான போலி பில்லில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்து சக ஊழியர்கள் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லை எனவும் ஆதங்கத்தை கொட்டியுள்ளார். அண்மைக் காலமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளானதால், வேறு வழியின்றி தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக ஜோதிஷா அந்த கடித்தத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக மூத்த பொறியாளர்கள் தினேஷ் மேதி சர்மா மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். உதவி பொறியாளர் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.
போலி பில் தயாரித்த கட்டுமான பணிகள் குறித்து விசாரிக்கவும், அதற்கான செலவை மறு மதிப்பீடு செய்யவும் நடடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறையில் போலி பில்லை அப்ரூவல் செய்ய, சீனியர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறி, பெண் பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
—————–
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
—————-
July 24, 2025 4:21 PM IST
போலி பில்லில் கையெழுத்திட கட்டாயப்படுத்திய சீனியர் அதிகாரிகள்.. பெண் பொறியாளர் எடுத்த விபரீத முடிவு!

