ஜோகூர் பாரு:
ஜோகூர் குடிநுழைவுத் துறை, கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று தாமான் டாயாவில் உள்ள ஒரு கொண்டோமினியத்தில் மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் செர்காப்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், ‘பறக்கும் பாஸ்போர்ட்’ கும்பலின் முகவர் என்ற சந்தேகத்தின் பேரில் 44 வயதுடைய ஓர் உள்ளூர் நபரைக் கைது செய்தது.
அமலாக்கப் பிரிவு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகச் சேகரித்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அன்று மாலை 6.50 மணிக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் இயக்குநர் முகமது ருஸ்டி முகமது டருஸ் தெரிவித்தார்.
நாட்டிற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பயண ஆவணங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்பது வெளிநாட்டுக் கடப்பிதழ்களையும் தனது குழு பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
“பாதுகாப்பு முத்திரைகளை ஒழுங்கற்ற முறையில் (சட்டவிரோதமாக) பெற கடப்பிதழ்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
எந்தவொரு கடப்பிதழின் முறைகேடான பயன்பாட்டையும் தனது துறை கடுமையாகப் பார்க்கும் என்றும், தேசிய இறையாண்மையை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு தனிநபருடனும் சமரசம் செய்யாது என்றும் முகமது ருஸ்டி கூறினார்.
பொதுமக்கள் தங்கள் கடப்பிதழ்களை எந்த தரப்பினரிடமும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் அத்தகைய நடவடிக்கைகள் தொடர்பான எந்த தகவலையும் உடனடியாக ஜோகூரின் மலேசிய குடிநுழைவுத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று பெர்னாமா செய்தி கூறுகிறது.




