Last Updated:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார். ரஷ்ய அதிபர் புதின், 30 நாட்கள் தாக்குதலை நிறுத்தவும் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் உடன், டிரம்ப் நேற்று முன் தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உக்ரைன் நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு அதிபர் புதின் ஒப்புக்கொண்டார். மேலும் இரு நாடுகளும் தலா 175 போர் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்புக்கொண்டார். அதன்படி, ரஷ்ய சிறையில் இருந்த உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் 175 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும், போரில் காயமடைந்த 22 வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக் கொள்வதாக ஜெலன்ஸ்கி உறுதியளித்தார். மேலும், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 20, 2025 6:57 AM IST


