இந்நிலையில், ஈரானுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெஹ்ரான் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டதாக ஈரானின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். ஆனால் ஈரானின் வெளியுறவு அமைச்சு, இஸ்ரேல் முழுமையாக அதன் தாக்குதல்களை நிறுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளது.
போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வதற்குச் சிலமணி நேரத்திற்கு முன்னர் ஈரான் சில ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக அந்நாட்டின் எஸ்என்என் ஊடகம் கூறியுள்ளது.
கடந்த வாரயிறுதியில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக அமெரிக்கா ஈரானின் அணுவாயுதக் கூடங்களில் குண்டு மழை பொழிந்தது.
ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் அதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
“நாங்கள் அணுவாயுதங்களைத் தயாரிக்க முடிவெடுத்துவிட்டால் அதை யாரும் நிறுத்த முடியாது”, என்று ஈரானின் தலைவர் அலி ஹாமேனி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இஸ்ரேலும் ஈரானும் சில மணி நேரங்களுக்கு முன்பு அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகவும், குறிப்பாக இஸ்ரேலின் செயல் தனக்கு வருத்தமளிக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தெரிவித்தார்.
தி ஹேக் நகரில் நேட்டோ உச்சிநிலை மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட உடனேயே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என்றார்.
ஈரானின் அணுசக்தித் திறன்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

